காதல் - அத்தியாயம் 3
- Sivaraj Parameswaran
- Jun 2, 2021
- 6 min read
Updated: Apr 8, 2024

ஜூலை 17 1999
அவள் கையில் 5 ஸ்டார் சாக்லேட்டுடன் எங்களை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். நானும் விக்கியும் மாறி மாறி பார்த்துக்கொண்டோம். ஒரு நொடி இவள் டேஸியாய் இருப்பாளோ என்ற சந்தேகத்துடன், "டேஸி?" என்றேன். அவள் பின்னால் திரும்பிப் பார்த்து "I beg your pardon" என்று எங்களை பார்த்து சொல்ல நானும் விக்கியும் விழி பிதுங்கி நின்றோம். அவள் சொன்னதில் முதல் மூன்று வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்தது அந்த கடைசி வார்த்தைதான் என்ன வென்று புரியாமல் குழம்பி நின்றேன். விக்கி படிப்பாளி ஆங்கில புலமையும் கொண்டமையால் அவன் சுதாரித்துக்கொண்டு "Hi My name is vicky. This here is my friend name subbu! We study 11th standard in St.Peters Higher Secondary School. How can we help you?" என்று அவன் மூச்சு விடாமல் பேச நான் வாயடைத்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு வித மமதையோடு என்னை பார்த்து அவன் சிரித்தான் அதில் அவன் ஆணவம் தெரிந்தது. அன்று தான் ஆங்கிலம் எவ்வளவு பெரிய குறை என்பதை உணர்ந்தேன்.
“Hi Vicky, I am Martina. Sorry for what that happened in the church. I was so embarrassed. Am sorry again. Are you guys from this neighbourhood? I am new to this neighbourhood and the city too. Was in Australia! Why is he staring at me like that?” அவள் என்ன சொன்னாள் என்பது எனக்கு மட்டும் அல்ல அவனுக்கும் புரியவில்லை. விக்கி பதில் பேசாமல் திணற ஒரு வித புண் சிரிப்பு என் இதழ் ஓரம் மலர்ந்தது. நானும் விக்கியும் முழிப்பதை கண்ட அவள் தெளிவான தமிழில் ஆங்கில சாயலுடன் பேசினாள். "ஹாய் விக்கி, நான் மார்டினா! முதல்ல Chruch-ல நடந்த சமபவத்துக்கு என்னை மன்னிச்சிடுங்க. நாங்க இங்க புதுசா வந்து இருக்கோம்! நீங்க இரண்டு பேரும் இதே ஏரியாவா? தோ அந்த தெருமுனை வீடுல தான் எங்க வீடு." அவள் பேசும் தமிழ் எனக்கு உயிர் ஊட்டியது. தமிழ் என்பதால் முந்திக்கொண்டு பேச ஆரம்பித்தேன். விக்கி இந்த ஏரியா இல்லை என்றும் அவளுது பக்கத்து வீடு என்னுடையது என்றும் பெருமையோடு கூறினேன். இதில் என்ன பெருமை என்று எனக்கு தெரியவில்லை இருந்தாலும் ஒரு பெருமை இருந்தது. அவள் தன்னிடம் இருந்த சாக்லெட்டை என்னிடம் தந்தாள் பெருமையோடு விக்கியை பார்த்து சிரித்தேன். விக்கி முகம் சுருங்கி சைக்கிளின் மீதேறி உட்கார்ந்தான். அவள் விக்கியை அன்போடு கூப்பிட்டு அவனுக்கும் ஒரு 5 ஸ்டார் சாக்லெட்டை கொடுத்தாள். என் ஆணவ சிரிப்பு காற்றோடு கரைந்தது.
சைக்கிள் மீதேறிய விக்கி கீழிறங்கினான். பொறாமை பேய் என்னுள் படரத்தொடங்கியது. மார்டினா விக்கியை பற்றி விசாரிக்க. விக்கி அப்பா அம்மா பேங்க்கில் வேலைபார்ப்பதாகவும் அண்ணன் இன்ஜினியரிங் படித்து அமெரிக்காவில் இருப்பதாகம் தானும் இன்ஜினியரிங் படித்து அமெரிக்கா செல்ல இருப்பதாக சொன்னான். இதைக்கேட்டு அவள் "வாவ் கூல் பிளான்" என்று சொன்னாள். எரிச்சல் தாங்காமல் நான் "அவன் லவ் பண்ற பொண்ணும் இதே பிளான் தான் வச்சு இருக்கா!" என்று சொல்ல, அவள் "ஓ உங்களுக்கு கேர்ள் பிரண்ட் இருக்கா? நைஸ்!!" என்று சிரித்துக்கொண்டே சொல்ல எரிச்சலோடு விக்கி என்னை பார்த்தான். அவன் எரிச்சலடையும் அந்த ஒரு சந்தோஷமே ஒரு தனி சந்தோஷம் தான்.
சிறிது நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் நங்கள் மௌனமாக நடந்து கொண்டிருந்தோம். அவள் என்னை பற்றி விசாரிக்காதது என்னை சிறிது வருத்தம் அடையச்செய்தது. இருந்தாலும் அவளை பற்றி மேலும் அறிய உள்ள ஆவலில் நான் பேச்சை ஆரம்பித்தேன். அவளை பற்றியும் அவளது குடும்பத்தை பற்றியும் கேட்டேன். தனது தந்தை கார்கோ கம்பெனியில் ப்ரெசிடெண்ட் என்றும் தாய் தான் படிக்கும் புனித மேரி பள்ளியில் டீச்சர் என்று கூறி அமைதியானாள். என்னை பற்றி திரும்பவும் விசாரிக்க வில்லை. மௌனம் தொடர்ந்தது. விக்கி இதைக் கண்டு சிரித்தான். எனக்கு எரிச்சலும் சோகமும் ஒரு சேர வந்தது. தெரு முனைக்கு வந்து சேர்ந்தோம் அவள் வீட்டு வாசலில் நின்றோம். எங்களை பார்த்து வீடு வந்து விட்டது பிறகு பார்க்கலாம் என்று சொல்லி அவள் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினாள். ஏக்கம் என் கண்களில் நிறைந்திருந்தது. அவள் படி ஏறி மாடிக்கு சென்றுவிட்டாள். விக்கியின் சைக்கிளில் காற்றை இறக்கி விட்டு பழிதீர்க்கலாம் என்று சைக்கிள் டுயூபை பிடுங்க முயற்சித்தேன். எங்களுக்குள் தள்ளு முள்ளு நடக்க மேல் மாடியிலிருந்து மார்டினா "விக்கி" என்று கூப்பிட. நங்கள் நல்ல பிள்ளைகள் போல் அமைதியாகி அவளை பார்த்தோம். "நாளைக்கு எனக்கு இந்த ஏரியாவ சுத்தி காட்ட முடியுமா?"என்று கேட்டாள். விக்கி வாயெல்லாம் பல்லாக "ஓ அதுக்கென்ன பேஷ்ஷா சுத்தி பார்த்திடலாம்!" கோபத்தில் பல்லை கடிக்க ஆரம்பித்தேன், என்ன செய்வது என்று அறியாமல் சைக்கிளின் பெல்லை தொடர்ந்து அடித்துக்கொண்டுயிருந்தேன். "உங்க பிரென்ட் பிரீயா இருந்தா அவரையும் வர சொல்லுங்க" என்று என்னை பார்த்து சொன்னாள். இப்பொழுது என் முதகத்திலும் வாயெல்லாம் பல்லாக இருந்தது. நான் சிரித்துக்கொண்டே மேல பார்த்தேன். அவள் விக்கியிடம் "நாளைக்கு 5 மணிக்கு பாக்கலாம், பை பை" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். எங்கள் சண்டை தொடர்ந்தது, விக்கியின் சைக்கிளை ஓங்கி மிதித்துவிட்டு வீட்டிற்குள் ஓடினேன்.
அடுத்த நாள் பள்ளிக்கு சீக்கிரம் வந்து சேர்ந்தேன். லாவண்யாவை வாசலிலே பார்த்து முந்தின நாள் நடந்த சம்பவத்தை இல்லாததையும் பொல்லாததையும் சேர்த்து பூதாகரமாக சொன்னேன். விக்கி சிரித்தவாறு சைக்கிளில் வந்து கொண்டிருந்தான் என்னையும் லாவண்யாவையும் பார்த்தவுடன் அவனது சிரிப்பு மறைந்தது. நான் ஒரு வில்லத்தன சிரிப்புடன் அவனை பார்க்க, லாவண்யா விக்கியின் தலை முடியை பிடித்து மாவாட்ட ,அந்த கண் கொள்ளா காட்சியை ஓரக்கண்ணால் ரசித்துக்கொண்டே வகுப்பிற்கு சென்றேன்.
கோபத்தில் விக்கி வகுப்பறையில் வேறிடத்தில் உட்கார்ந்து கொண்டான். பள்ளி முடிய காத்துக்கொண்டிருந்தேன். 5 மணி எப்பொழுதாகும் என்று அடிக்கடி அருகில் உள்ளவனது கைக்கடிகாரத்தையும் திருப்பி பார்த்துக்கொண்டிருந்தேன். கடிகாரமுள் அன்று பார்த்து மிகவும் மெதுவாக நகர்ந்தது. காத்திருந்து காத்திருந்து பள்ளி முடிந்தது. வீடு திரும்பிய நான் ஒரு 10 முறையாவது உடையை மாற்றி பாத்திருப்பேன் ஒன்றும் பிடிக்கவில்லை. எதோ ஒன்றை போடவேண்டிய கட்டாயத்தில் ஒன்றை போட்டுக்கொண்டேன். அம்மா என் கூத்தை பார்த்து என்ன என்று முறைத்தாள். நான் வழிந்த சிரிப்பை பதிலாக வைத்து ஓடினேன். மணி மாலை 4.45 ஆனது. சைக்கிளை துடைத்து பளபளப்பாக்கினேன். பின்னால் இருந்த கேரியர் இருக்கையை கழட்டி தூரவீசினேன், ஒரு நப்பாசை. வேர்வையை துடைத்து மறுபடியும் பவுடர் பூசி கைகுட்டையிலும் சற்று அள்ளி போட்டுக்கொண்டேன்.
நேரம் 4.55 ஆனது, மார்டினா வீட்டின் முன்பு நின்று சைக்கிளின் பெடல் மீது ஸ்டைலாக கால் வைத்து பெல்லை அடித்தேன். கண்ணாடியை பார்த்து என் முடியை சரிசெய்து கொண்டிருக்க, மாடியிலிருந்து விக்கி கையில் டி கப்புடன் நின்று என்னை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். மார்டினா ஓடி வந்து "2 மினிட்ஸ்ல வந்துடுறோம்" என்று சொல்லி உள்ளே சென்றாள். விக்கியின் சிரிப்பு என்னை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது. கோபத்தில் கடவுளை ஏசினேன். தேவாலய மணி ஒலித்தது. கடவுள் இதற்க்கு மட்டும் செவி சாய்ப்பதாக தோன்றியது. விக்கி பொறுமையாக மாடிப்படி இறங்கி வர. "சைக்கிள் இல்லாமல் எப்படி வந்தான்" என்று நான் யோசிக்க. அருகே இருந்த டிவிஎஸ் மொபெட்டில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். வெள்ளி நிறத்தில் அந்த மொபெட் ஜொலிஜொலித்தது. எனது சைக்கிள் அந்த மொபெட்டிடம் தோற்று தலைகுனிந்து நின்றது. விக்கியின் சிரிப்பில் ஆயிரம் அம்புகளின் கோபம் இருந்தது. அந்த டுர்ர்ர்ர் டுர்ர்ர்ர் சத்தம் என் காதை கிழித்தது.
இந்த கலவரத்திலும் ஒரு குளிர் காற்று வீசியது, மார்டினா படிகளிலிருந்து கீழிறங்கி வந்து கொண்டிருந்தாள். முழுதுமாய் அவிழ்ந்த கூந்தல். தொலைக்காட்சில் வரும் ஷாம்பூ விளமபரம் போல அவளது கூந்தல் அழகாய் பறந்து என்னை வாய்பிளக்கச் செய்தது. அவளது பூப்போட்ட கருப்பு வெள்ளை பிராக் என்னை மதி மயங்கச் செய்தது. அவள் நேரே வந்து விக்கியின் தோள் மீது கைவைத்து பேச என்னை அறியாமல் என் பல் நர நர வென்று கடிக்கத் தொடங்கியது. கண்களில் கோபமும் கண்ணீரும் ஒரு சேர வந்தது. அடக்கிக்கொண்டு சிரித்த படி அதே வீராப்போடு கடவுளை சபித்தப்படி நின்றிருந்தேன்.
லாவண்யா மார்டினா வீட்டின் மாடி படி இறங்கி வந்தாள். அவளும் மார்டினாவும் சிரித்து பேசிக்கொண்டிருக்க, லாவண்யா விக்கியின் மொப்பெட்டில் ஏறி உட்கார்ந்தாள். ஒரு நிமிடம் என்ன நடக்கின்றது என்று புரியாமல் நான் நிற்க. மார்டினா எனதருகில் வந்து "நான் பைக் கொண்டு வரேன், நீ சைக்கிள இங்க பார்க் பண்ணிட்டு என் கூட வந்துரு" என்று சொல்லி என் பதிலுக்கு காத்திருக்காமல் பைக்கை எடுக்க சென்றாள். இப்பொழுது விக்கியை பார்த்தேன், இப்பொழுதான் தெரிந்தது அது விக்கியின் ஆணவச் சிரிப்பல்ல மாறாக அழுகை என்று. குதுகளுத்துடன் சைக்கிளை விட்டு இறங்கி ஸ்டைலாக அவளது பைக்கை நோக்கி நடந்தேன். என் மனம் ஆனந்த தாண்டவத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது.
அவள் பைக்கை ஸ்டார்ட் செய்தவுடன், எனக்குள் பாட்டு கேட்க தொடங்கியது...
"இதழின் ஒரு ஓரம் சிரித்தாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பால் அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்...."
மொத்த ராயபுரம் என்னை திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தது. ஒரு பெண் பைக் ஓட்ட அதுவும் ஒரு அழகான பெண் ஓட்ட, நான் அவள் பின்னால் அமர்ந்து அவளை ரசித்தவாறு ராயபுர கடற்கரை, துறைமுகம், குனிராமன் ஸ்டார், ராபின்சன் பூங்கா, பிரைட்டன் தியேட்டர், கல்மண்டபம் மார்க்கெட்டை சுற்றி சுற்றிக்காட்டிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அம்மா அங்கே என்னை பார்க்கின்றாள்! மார்டினா முதுகின் பின்னால் நான் ஒளிந்து கொள்ள முன் கண்ணாடியில் இதை மார்டினா கவனிக்கின்றாள்! "என்ன" என்று கேட்க "அம்மா"என்றேன். பதிலேதும் கூறாமல் சிரித்துக்கொண்டே நேரே பார்த்து பைக் ஓட்டினாள். அவள் சிரிப்பதின் அர்த்தம் புரியாமல் கண்ணாடியில் அவளை ரசித்துக்கொண்டே இடது பக்கம் திரும்பினேன் விக்கி என்னை முறைத்துக்கொண்டே வந்தான். லாவண்யா அவனை கொட்டிக்கொண்டு "நேரே பார்த்து வண்டி ஒட்டு" என்று சொல்ல அவனை பார்த்து சிரித்துக்கொண்டே டாடா காட்டினேன்.
இரண்டு மணிநேரம் ஒரு நொடிபோல் கரைந்து போனது. ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு அன்று எனக்கு நன்றாக புரிந்தது. 7 மணியளவில் விக்கிக்கும் லாவண்யாவுக்கும் டாடா காட்டிவிட்டு நாங்கள் மட்டும் அவள் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தோம். முதல் முறையாக என்னை பற்றி விசாரித்தாள். நான் "அப்பா மளிகை கடை வியாபாரம் பன்றாரு, அம்மா ஹவுஸ் வைப், நான் அவங்களுக்கு ஒரே பையன்" என்றேன். அவளும் தான் ஒரே மகள் எனக்கூற எனக்கு உள்ளுக்குள் ஒரு தனி சந்தோஷம் வந்தது. கொஞ்சம் நேரம் எதுவும் பேசாமல் இருந்தோம், அதற்குள் வீடும் வந்து சேர்ந்தோம். பக்கத்து பக்கத்து வீடு என்பதால் நான் சைக்கிளின் பூட்டு சரியாக உள்ளதா என்று பார்த்தேன். அவள் பைக்கை நிறுத்திவிட்டு வரும்வரை சும்மா சைக்கிளை நோண்டி கொண்டிருந்தேன். அவளும் வந்தாள் "உன்கிட்ட ஒன்னு கேக்கணும்னு இருந்தேன்!" என்று அவள் சொல்ல நான் ஆவலோடு சைக்கிள் நோண்டுவதை விட்டு அவளை பார்த்தேன் அப்பொழுது ஒரு மாருதி 800 கார் எங்கள் அருகே வந்து நின்றது. மார்டினாவின் அம்மா ஓட்ட அப்பா காரிலிருந்து இறங்கினார். அவர் சிரித்துக்கொண்டே "Hi young man, am Taydon Roy Martina’s dad" என்று சொல்லிக்கொண்டு கை நீட்ட நான் பதிலேதும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே அவர் கையை பிடித்து கைகுலுக்கினேன். அப்பாவும் மகளும் வேகமாக அவர்களுக்குள் உரையாட நான் திணறிக்கொண்டிருந்தேன். ஆங்கிலோ இந்தியர்களின் ஆங்கிலம் சற்று வித்தியாசமாக இருந்தது, முக்கியமாக ஒன்றும் புரியாமல் இருந்தது. நான் வாய் பிளந்து ஆஆ என்று பார்ப்பதை புரிந்துகொண்ட மார்டினாவின் தாய் அருகில் வந்து "பாய் இப்படியே வாய் பார்த்துட்டு இருக்காதே, தப்பு தப்பா பேசுனாலும் பரவாயில்ல but பேசு" என்று அவரின் டீச்சரின் பண்பை எனக்கு அன்பாய் எடுத்துரைத்தாள். அவரின் ஆறுதல் எனக்கு பெரும் தைரியத்தை கொடுத்தது.
மார்டினாவின் அப்பாவும் அம்மாவும் வீட்டினுள் செல்ல, இன்னும் 5 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி ஒரு நிமிடம் என் முன் மௌனமாய் நின்றாள். என்ன சொல்வதென்று தெரியாமல் நானும் மௌனமாய் நின்று கொண்டிருந்தேன். அவளாகவே "உன்னோட டேட் ஆப் பர்த் என்ன" என்று கேட்க நான் "26 டிசம்பர் 1986" என்று சொல்ல "சின்ன பையனா? உன்னோட பர்த் டேட் என்ன?" என்று கேட்க "ஒரு பொண்ணு கிட்ட டேட் ஆப் பர்த் கேக்ககூடாதுன்னு உனக்கு தெரியாது?" "நீங்க மட்டும் கேட்டீங்க நான் சொல்லல!!" என்று சோகமாக மொனகினேன். "சரி அழுவதே சொல்றேன், 24 செப்டம்பர் 1986 மூணு மாசம் உன்னைவிட பெரியவ நான்" என்றாள் "அப்போ நான் உன்ன எப்படி கூப்பிடறது? அக்காண்ணு கூப்பிடணுமா?" என்று நான் கேட்க, கோபமாக எனது சைக்கிளை ஒரு மீதி மிதித்து "சும்மா இல்ல டா விக்கி சொன்னது சரி தான் உனக்கு டேஸி ஏன் லெட்டர் அனுப்பலேன்னு இப்போ புரியுது" என்று சீறிக்கொண்டிருக்க, மார்டினாவின் அம்மா அவளை கூப்பிட, கோபமாக மாடிப்படியேறி சென்றாள்.
விக்கி என்று கோபமாக மனதிற்குள் உரக்கக் கத்தினேன்....
தொடரும்...
இப்படிக்கு,
- சுப்பு (எ) சுப்பிரமணி
எழுத்து உங்கள்,
- ஷிவ் (எ) சிவராஜ் பரமேஸ்வரன்.
Comments