காதல் - அத்தியாயம் 4
- Sivaraj Parameswaran
- Jun 4, 2021
- 5 min read
Updated: Apr 8, 2024

விக்கி என்று கோபமாக மனதிற்குள் உரக்கக் கத்தினேன்....
கடித்துக் குதறும் கோபத்தோடு சைக்கிளை வேகமாக மிதித்தித்து நேரே விக்கியின் வீட்டிற்கு சென்றேன். வீடு பூட்டி இருந்தது! கோபத்தில் வீடு திரும்பினேன். அன்று இரவு சாப்பிட பிடிக்க வில்லை அம்மாவின் கோபத்திற்கு பயந்து சாப்பாட்டை விழுங்கினேன். எனது அறையின் மின்விசிறியை பார்த்துக் கொண்டு யோசைனையில் மூழ்கினேன். "அவள் என்னை பற்றி என்ன நினைச்சிருப்பா? டேஸி கதைய சொல்லி அசிங்கப்படுத்திட்டானே!! லாரில அடிபட்டு சாவ நாதாரி நாய்" என்று பல்லை கடித்துக்கொண்டு அவன் மீதுள்ள கோபத்தை தலையணை மீது காட்டினேன். சிறிது நேரத்தில் என்னை அறியாமல் தூங்கிப்போனேன்.
மறுநாள் பள்ளியில் விக்கியை தேடினேன் பெல் அடிக்கும் வரை அவன் பள்ளிக்கு வரவில்லை. ஏனோ அவன் மீதிருந்த கோபம் அவன் வரவில்லை என்றதும் அக்கறையாக மாறியது. லாவண்யாவை விசாரித்தேன் அவள் திருதிருவென்று முழித்தாள். மதிய இடைவேளையில் விக்கியின் வீட்டிற்கு சென்றேன். வீடு பூட்டியிருந்தது. வெளியே வந்தேன், ஏதேனும் விபரீதமோ என்ற யோசனையில் வலது பக்கம் திரும்பினேன். விக்கியின் மொப்பெட் அங்கே நொறுங்கி உடைந்து கிடந்தது. அதை கண்ட பின் என்னை ஒருவித பயம் ஆட்கொண்டது, யாரை விசாரிப்பது என்று தெரியாமல் அதே தெரு முனையில் உள்ள பெட்டி கடைக்கு ஓடிச் சென்று விசாரித்தேன். விசாரித்ததில் முந்தின இரவில் ஒரு டேங்கர் லாரி மொப்பெட்டின் மீது பலமாக மோதி, அதில் ஒருவன் பலத்த காயம் அடைந்து, அவன் அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாக சொன்னார். இதைக் கேட்டு எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. தலையை பிடித்துக் கொண்டு ரோட்டின் நடுவே உட்கார்ந்தேன். என்னை அறியாமல் என் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. என் காதுகளில் நான் நேற்று கூறிய அந்த கொடிய வார்த்தை "லாரில அடிபட்டு சாவே நாதாரி நாய்!!" ரிங்காரித்ததுக் கொண்டிருந்தது. அந்த நெரிசலான தெருமுனையில் எல்லோரும் என்னை கடந்து செல்ல எனது தனிமையை உணர்ந்தேன். ஆட்டோ ஒன்று வேகமாக வந்து என்னை பலமாக மோதியது. மோதிய வேகத்தில் நான் தூக்கிவீசப்பட்டு தரையில் உருண்டு விழுந்தேன்.
நான் அலறிய அலறலில் அடுக்களையிலிருந்து அம்மா ஓடிவந்தாள்! அப்பா பாதி சவரத்தை நிறுத்தி ஓடிவந்தார். நான் தரையில் கிடந்து துடித்து கொண்டிருந்தேன். நான் தரையில் துடிப்பதை பார்த்து அப்பா தலையில் அடித்துக்கொண்டு நாக்கை கடித்துக்கொண்டு ஒரு மிதி மிதித்தார். நான் கனவு கலைந்து, தெளிந்து கண் திறந்தேன். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த வசனத்தை பிசுரில்லாமல் ஒப்பித்தேன் "நான் எங்க இருக்கேன்? நான் இப்படி கீழே விழுந்தேன்? அம்மா நான் ஆட்டோ லாரி" என்று சொல்ல அப்பா துண்டை எடுத்து ஒரு அடி அடிக்க கெட்ட கனவெல்லாம் பஞ்சாய் பறந்து போனது. அம்மா அன்பாக அரவணைத்து, தலையை கோதி ஒரு அன்பு கொட்டு வைத்து "கொஞ்ச நேரத்துல பயப்படவச்சுட்டியே! ஆஞ்சேநேயருக்கு ஒரு அர்ச்சனை பண்ணனும்! யார் கண்ணு பட்டுச்சோ" என்று அவள் அன்பை வாரி இறைத்து என்னை மார்போடு அணைத்து கொண்டாள். ஒரு நொடி விக்கி இறந்தது கனவு என்றாலும் அந்த வலி மட்டும் உண்மையாகவே இருந்தது. என் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.
அன்று வகுப்பறையில் நுழையும் பொழுது விக்கி லாவண்யாவிடம் கடலை போட்டுக்கொண்டிருந்தான். நேரே சென்று அவனை ஆரத்தழுவினேன். கண்கள் ஈரமானது. விக்கி ஒன்றும் புரியாமல் நின்றான். லாவண்யா நான் அழுவதாக சைகை செய்தாள். நான் விலகி நேரே எனது இருக்கைக்கு சென்று அமர்ந்தேன். அன்று யாரிடமும் பேசவில்லை.
மதிய இடைவேளையில் விக்கியிடம் நடந்ததை தெரிவித்தேன், அதை கேட்டு விக்கி சத்தமாக சிரித்துக்கொண்டு "டேய் இதுக்காடா இந்த சீனு!! நான் அப்படி எல்லாம் ஒத்தைல போகமாட்டேன் டா! போனா உன்னையும் சேர்த்து தான் கூட்டிட்டு போவேன்" லாவண்யா "அப்போ நான்" "ஏன் மா செத்தபிறகும் நிம்மதியா இருக்க விடமாட்டியா" என்று விக்கி நக்கலாக கூற. லாவண்யா கோபமாக பல்லை கடித்துக்கொண்டு பலமாக விக்கியின் தலை மீது ஒரு கொட்டு வைத்து அவனது தலைமுடியை பிடித்து மாவாட்டினாள். நான் சிரித்தேன், நாங்கள் சிரித்தோம். அன்றைய பொழுது இனிமையாய் முடிந்தது.
இரண்டு நாட்கள் கடந்து, ஒரு மாலை புனித பீட்டர் தேவாலயத் திடலில் பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டி நடந்தது. நானும் விக்கியும் பள்ளி நண்பர்களோடு தேவாலய படியில் உட்கார்ந்து விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்தோம். மார்டினாவின் பள்ளியும் வந்துள்ளது என்று விக்கி என்னிடம் தெரிவிக்க, எனது கண்கள் மார்டினாவை தேடியது. விக்கி அங்கு மார்டினாவை பார்த்து எனக்கு சைகை காட்டினான். நான் கூட்டத்தில் எழுந்து அவளை நோக்கி கையசைத்தேன், அவள் கண்டும் காணாதவள் போல் எங்களை கடந்து சென்றாள். நான் முகம் வாடிப்போனேன், விக்கி இதைப்பார்த்துமற்ற நண்பர்களோடு சேர்ந்து என்னை பார்த்து சிரித்தான்.
மறுமுறை அவள் எங்களை கடந்து செல்ல, நான் அமைதியாய் இருந்தேன். விக்கியும் நண்பர்களும் "சுப்பு! சுப்பு! சுப்பு!" என்று என் பெயரை உரக்க கத்தினார்கள். மார்டினாவும் அவளது தோழிகளும் எங்களை திரும்பி பார்த்தார்கள். அதில் பலர் எங்களை பார்த்து சிரித்து தங்களுக்குள் கிசுகிசுக்க மார்டினா மட்டும் என்னை பார்த்து முறைத்தாள். நான் என்ன செய்வது என்றறியாமல் விழிபிதுங்கி உட்கார்ந்திருந்தேன்.
மறுமுறை அவள் தோழிகள் மட்டும் தனியே செல்ல, சத்தம் போடாமல் இருந்தவர்கள் மார்டினா தனியே எங்களை கடக்க திரும்பவும் என் பெயரை கத்தினார்கள். தோழிகளுக்கு இது மார்டினவிற்கான குறியீடு என்பது தெரிந்தது. அவர்களுக்குள் சிரித்துக்கொண்டனர். மார்டினாவும் உதட்டோரம் சிரிப்பை மறைத்த வைத்து சிரித்தாள். என்னை பார்க்கும் பொழுது மட்டும் ஒரு முறைப்பு இருந்தது. அதற்குள் எங்கள் PT வாத்தியார் பிரம்போடு வந்து கூட்டத்தை நையப்புடைத்தார், "இந்த வயசுல சைட்டு, விசிலு? யாரா இங்க சுப்பு" என்று கேட்டுக்கொண்டே பிரம்படி கொடுத்துக்கொண்டிருந்தார். இதை பார்த்துக்கொண்டே அவள் என்னை திரும்பிப் பார்த்து சிரித்தவாறு சென்றாள். நான் பார்க்கிறேன் என்று தெரிந்தவுடன் பொய்க்கோபத்துடன் திரும்பிக்கொண்டாள். அந்த பிரம்படியிலும் எனது மனது குதூகலித்தது. என் குதூகலத்தை பொறுக்க முடியாத பொறாமைக்கார நண்பனொருவன் "சார் அவன் தான் சார் சுப்பு" என்று என்னை கை காட்ட. நான் கூட்டத்திலுருந்து விலகி ஓடினேன். பெண்கள் கூட்டத்தை கடந்து ஓடும் பொழுது மார்டினாவிற்கு கை காட்டி சிரித்துக்கொண்டு ஓடினேன். இந்த முறை அவள் சிரித்து வெட்கித் தலை குனிந்தாள். SPB என்னுள் பாட அவள் வெட்கம் ரசித்து, பிரம்படி வாங்கி, சிரித்துக் கொண்டே திடலில் ஓடினேன்...
"உன்னைப் பார்த்த பின்பு
நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான்
இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று
நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று
இதயம் தெளிந்தேன் இளமை
இளமை பாதித்தேன் கொள்ளை
கொண்ட அந்த நிலா என்னைக்
கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி இன்னும்
வேண்டும் வேண்டும் என்றதே..."
தெருமுனையில் தெருவிளக்கின் கீழ் நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். அவள் எங்களை கடந்து ஓரக்கண்ணால் என்னை பார்த்து நடந்து செல்ல, அடுத்த பந்திலே நான் அவுட் ஆகி அவளுடன் ஓடி போய் சேர்ந்துக்கொள்வேன். அவள் பேச நான் அமைதியாய் அவளை பின்தொடர்வேன்.
அவளுடன் சேர்ந்து படிக்கலானேன். அவள் ஆங்கிலம் சொல்லித்தரும் நேரம் என் கண்கள் அவள் உதட்டையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கும். ஒருமுறை "What are you looking at?" என்று அவள் கேட்க வாயடைத்து போனேன். என்ன சொல்வதென்று தெரியாமல் "ஒண்ணுமில்லையே" என்று முணுமுணுத்து புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன். நான் சொல்வது பொய் என்றறிந்து என்னை ஓரக்கண்ணால் பார்த்து உதட்டோரம் ஒரு சிரிப்பு சிரித்தாள். அந்த சிரிப்பு என் பருவ காமத்தை உயிர்த்தெழுத்தியது. அவளின் நீலக் கண்கள் என்னை பித்துபிடித்தவன் ஆக்கியது.
இந்த கட்டுக்கடங்காத உணர்ச்சியை அவளிடம் சொல்லிவிட முடிவெடுத்தேன். எப்படி சொல்ல என்று யோசித்தப் பொழுது கவிதை வாயிலாக சொல்லலாம் என்று ஒரு அபாயகரமான முடிவை எடுத்தேன். அதுவும் ஆங்கிலத்தில் கவிதை, இந்த பூவுலக வரலாற்றில் நான் எழுதிய மிகவும் கேவலமான என் முதல் கவிதை.
-----------------------------------------------
My Dear & Dearest Martina,
You have taken my heart.
Give it back!
But you can't just give it back,
It belongs to you!
So the only way for me to get my heart back,
Is for you to belong to me!
Be mine; be mine,
Because my heart is yours.
Your eyes are like diamonds.
You are wonderful
Like the sky at sunset.
Those are just two of the reasons why I like you.
I'll tell you a hundred and one
More reasons why I like you
If you promise to be mine forever.
Do the math, sweet owner of my heart,
Do the math.
That's a total of one-hundred and three
Reasons why I love you.
With loads & loads of love,
Subbu
-----------------------------------------------
அழகான ஒரு பூங்கொத்தை வாங்கிக்கொண்டு, என் அழகிய கவிதையை வாழ்த்தட்டையில் எழுதி, சுளிவில்லாமல் நன்றாக தேய்த்த பழுப்பு-சிவப்பு நிற சட்டையும் கருப்பு நிற கால்-சட்டையும் அணிந்து வகுடு எடுத்து வாரிய தலைமுடியுடன் என்ன சொல்ல வேண்டும் என்பதை இருமுறை கண்ணாடி முன் ஒப்பித்து பார்த்து கடவுளை வேண்டி திருநீர் இட்டு சகல தெய்வங்களையும் வணங்கி சைக்கிளை எடுத்தேன். பின்னாலிருந்து விக்கி "எங்க டா போறே?" என்று அபசகுனமாய் கேட்க "இன்னைக்கு காரியம் விளங்கின மாதிரிதான்" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு சைக்கிளின் மீதேறி உட்கார்ந்தேன். "டேய் சொல்லிட்டு போடா கேக்குறேன்ல" என்று அவன் மறுபடியும் கத்த "மார்டினாவ பார்க்கபோறேன்" என்று முணுமுணுத்தவாறு சைக்கிளை எடுத்தேன்.
மேகம் மூடல் காரணமாக சீக்கிரமாக இருட்ட தொடங்கியது, மேகத்தை பார்த்தவாறு பூங்கா முன் சைக்கிளை நிறுத்தினேன். உள்ளே சென்றேன். அவளைக் கண்டேன், அந்த மாலைநேர வெளிச்சம் அவளை இன்னும் அழகாக்கியது. யாரோ ஒருவரோடு பேசி கொண்டிருந்தாள். யார் என்று பார்க்க அங்கிருந்த கல் தூணில் என்னை மறைத்துக்கொண்டு பார்த்தேன். என் கண்கள் அகலமாக விரிந்தது. ஒரு வித பயம் என்னை ஆட்கொண்டது. அந்த ஈரக் காற்றிலும் நான் வேர்த்தேன்.
ஆஷ்டனுடன் மார்டினா நின்று கொண்டிருந்தாள். ஆஷ்டன் பேரழகன், கன்னிப்பெண்களின் கந்தர்வ நாயகன், அவன் நான் காதலிக்கும் பெண்ணிடம் இல்லை, நான் காதலிக்க ஆசை படும் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தான். அதுவும் அவன் அவளை சிரிக்கவைத்து பேசிக்கொண்டிருந்தான். எரிச்சலில் மேகத்தை பார்த்து "இது உனக்கு அடுக்குமா? உனக்கெல்லாம் மனசாட்சி இல்லையா?" என்று நான் கேட்க, இடி முழங்கியது. இந்த முறை அவளை இடுப்போரம் அணைத்து கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்துக்கொண்டிருந்தான். இடி மறுபடியும் முழங்கியது, கையில் இருந்த பூங்கொத்து கைநழுவி இரும்பு நாற்காலியின் மீது விழுந்தது. இதைக் காண இயலாமல் நான் திரும்பவும் மேகத்தை பார்த்து கெட்ட வார்த்தையால் ஏசினேன், "ஏன்டா எனக்கு மட்டும் இப்படி பண்ற?" என்று கேட்க, மழையின் முதல் துளி என் மீது விழுந்தது. தொடர்ந்து ஜோவென்று மழை பெய்ய ஆரம்பித்தது. நான் மொத்தமாக நனைந்தேன், நான் எழுதிய கவிதையின் பேனா மை மழை நீரில் கரைந்து செல்வதை பார்த்தேன். எனது கண்ணீரும் மழையோடு கலந்தது. மழையில் நனைந்து கொண்டே திரும்பிப் பார்க்காமல் வாசலை நோக்கி நடந்து சென்றேன்.
மழைக்காக ஒதுங்கியிருந்த மார்டினா, நான் அங்கிருந்து செல்வதைக் கண்டாள்...
தொடரும்...
- சுப்பு (எ) சுப்பிரமணி
எழுத்து உங்கள்,
- ஷிவ் (எ) சிவராஜ் பரமேஸ்வரன்.
Komentarze