காதல் - அத்தியாயம் 5
- Sivaraj Parameswaran
- Jun 8, 2021
- 4 min read
Updated: Apr 8, 2024

ஆஷ்டனுடன் மார்டினா நின்று கொண்டிருந்தாள். ஆஷ்டன் பேரழகன், கன்னிப்பெண்களின் கந்தர்வ நாயகன், அவன் நான் காதலிக்கும் பெண்ணிடம் இல்லை, நான் காதலிக்க ஆசை படும் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தான். அதுவும் அவன் அவளை சிரிக்கவைத்து பேசிக்கொண்டிருந்தான். எரிச்சலில் மேகத்தை பார்த்து "இது உனக்கு அடுக்குமா? உனக்கெல்லாம் மனசாட்சி இல்லையா?" என்று நான் கேட்க, இடி முழங்கியது. இந்த முறை அவளை இடுப்போரம் அணைத்து கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்துக்கொண்டிருந்தான். இடி மறுபடியும் முழங்கியது, கையில் இருந்த பூங்கொத்து கைநழுவி இரும்பு நாற்காலியின் மீது விழுந்தது. இதைக் காண இயலாமல் நான் திரும்பவும் மேகத்தை பார்த்து கெட்ட வார்த்தையால் ஏசினேன், "ஏண்டா எனக்கு மட்டும் இப்படி பண்ற?" என்று கேட்க, மழையின் முதல் துளி என் மீது விழுந்தது. தொடர்ந்து ஜோவென்று மழை பெய்ய ஆரம்பித்தது. நான் மொத்தமாக நனைந்தேன், நான் எழுதிய கவிதையின் பேனா மை மழை நீரில் கரைந்து செல்வதை பார்த்தேன். எனது கண்ணீரும் மழையோடு கலந்தது. மழையில் நனைந்து கொண்டே திரும்பிப் பார்க்காமல் வாசலை நோக்கி நடந்து சென்றேன்.
மழைக்காக ஒதுங்கியிருந்த மார்டினா, நான் அங்கிருந்து செல்வதைக் கண்டாள். மழையின் சத்தத்தில் அவள் என்னை அழைத்தது எனக்கு சுத்தமாக கேட்கவில்லை. அவள் கூப்பிட நான் திரும்பி பார்க்காமல் நடந்து சென்றுக்கொண்டிருந்தேன். அவள் என் பின்னே மழையில் நனைந்துக் கொண்டு ஓடி வந்தாள். நான் தெருவோரம் வந்ததும் சைக்கிளை மறந்தது ஞாபகத்திற்கு வர, "சைக்கிள்" என்று உடனே திரும்பினேன். என் முன்னே மூச்சிரைக்க தொப்பலாக நனைந்து கொண்டு என் முன்னே மார்டினா நின்றிருந்தாள்.
"டேய் நான் கூப்புட்டுட்டே இருக்கேன், திரும்பி பார்க்காம போறே?" அவள் கேட்க நான் மௌனமாய் நின்றிருந்தேன். "என்னடா ஆச்சு? ஏன் சோகமா இருக்க" என்று கூறி அவள் என் கையை பிடிக்க, அவள் கையை சட்டென உதறினேன். அவளின் முகம் மாறியது. என்ன ஆயிற்று என்று அவள் மறுபடியும் கேட்க நான் மௌனமாய் வேறு திசை நோக்கி நின்றிருந்தேன். கோபத்தில் என்னை பேசுமாறு அடித்தாள். அடிவாங்கிக் கொண்டு அந்த மழையில் நாங்கள் நின்றிருந்தோம். ஆஷ்டன் அங்கு குடையுடன் வந்தான். அவனைக்கண்ட எரிச்சலில் "தோ உங்க ஹீரோவே வந்துட்டாரு, போங்க போய் ஜாலியா இருங்க!!" என்று நான் கூறி முடிப்பதற்குள் கன்னத்தில் பளார் என்று அறை விழுந்தது. அவளின் கோபம் அவள் கண்ணில் தெரிந்தது. ஆஷ்டன் குடையுடன் அருகில் வந்து அவளது தோளோடு தோள் அனைத்து நிற்க மார்டினா அவனைத் தூர தள்ளி கோபமாக நடந்து சென்றாள். ஆஷ்டன் என்னை முறைத்துக் கொண்டே அவளை பின்தொடர்ந்து சென்றான். நான் சைக்கிளை எடுக்க கன்னத்தை தடவியவாறு பூங்காவை நோக்கி நடந்தேன்.
மறுநாள் காலை வழக்கம் போல் மார்டினாவும் அவளது அப்பாவும் அம்மாவும் பூங்காவிற்கு நடக்க சென்றனர். மார்டினா எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் தூணின் அருகிலுள்ள இரும்பு நாற்காலியில் அமருகின்றாள். அப்பாவும் அம்மாவும் என்ன என்று கேட்க ஒன்றும் இல்லை தலைவலி என்று சொல்லி அங்கு அமர, அவர்கள் அவளை கடந்து செல்கின்றனர். உதய சூரியன் உதிக்க சூரியனின் பொன்வெயில் அவள் கண்களை கூசச் செய்கிறது. அவள் அங்கிருந்து எழுந்து செல்ல முற்பட. காலில் ஏதோ ஒன்று ஒட்ட என்ன என்று பார்க்கின்றாள். பழைய செய்தித்தாள் பசை போல் கூழாகி செருப்பில் ஒட்டிக்கொண்டிருந்தது. அதை அருகில் உள்ள கல்லின் மீது தேய்த்து களைய, நாற்காலியின் கீழே ரோசாப்பூ பூங்கொத்தும், மை கலைந்த ஒரு வாழ்த்தட்டையையும் பார்க்கின்றாள். அச்சமயம் மார்டினாவின் அம்மா, வா வீட்டிற்கு செல்லலாம் என்று அவளை அழைக்கின்றாள். ஏதோ குப்பை என்று தோன்ற அவளும் வாசலை நோக்கி நடக்கின்றாள், சில அடிகள் வைத்தவுடன் அவளது கண்களில் அந்த வாழ்த்தட்டையின் கீழே பாதி அழிந்த சுப்புவின் பெயர் மின்னல் போல் கண்ணில் வந்து சென்றது. அவள் ஓடி சென்று அந்த பூங்கொத்தை எடுத்து அந்த வாழ்த்தட்டையும் எடுத்து படித்தாள்.
-----------------------------------------------
My Dear & Dearest Martina,
You have taken my heart.
Give it back!
But you can't just give it back,
It belongs to you!
So the only way for me to get my heart back,
Is for you to belong to me!
Be mine; be mine,
Because my heart is yours.
Your eyes are like diamonds.
You are wonderful
Like the sky at sunset.
Those are just two of the reasons why I like you.
I'll tell you a hundred and one
More reasons why I like you
If you promise to be mine forever.
Do the math, sweet owner of my heart,
Do the math.
That's a total of one-hundred and three
Reasons why I love you.
With loads & loads of love,
Subbu
-----------------------------------------------
வாழ்த்தட்டையின் வரிகள் அவள் கண்களில் நீர் வழிய செய்தது, சிரித்துக்கொண்டே "That Fuck" என்று சொல்லி துள்ளிக்குதித்துக்கொண்டு வாசலை நோக்கி சென்றாள். பூங்கொத்தை தனது அறையில் உள்ள ஒரு கண்ணாடி குவளையில் இட்டு வாழ்த்தட்டையை பத்திரமாக இஸ்திரி பெட்டியால் காயவைத்தாள். மாலை நான்கு மணியாக அன்று அவள் காத்துக்கொண்டிருந்தாள். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து பூங்கொத்தையும் வாழ்த்தட்டையையும் எடுத்து பையில் வைத்துக் கொண்டு நேரே என் வீடு நோக்கி நடந்தாள்.
என் வீடு அவளது அண்டை வீடு, முதல் மாடியில் தங்கியிருந்தேன். படியேறி மேலே வந்தாள். கதவு திறந்திருந்தது. யாரையும் காணாமல் வீட்டின் பெல்லை இருமுறை அடித்தாள். அம்மா திறந்த கதவிற்கு யாரு பெல் அடிக்கிறார் என்று அடுக்களையிலிருந்து எட்டி பார்க்க. கதவோரம் ஒரு பெண் நிற்கக் கண்டு திடுக்கிட்டு அம்மா அடுக்களையிலிருந்து வேகமாக வாசலுக்கு வந்து "யாரும்மா என்ன வேணும்?" என்று கேட்க. "ஹாய் ஆண்ட்டி, நான் சுப்பு பிரெண்டு, சுப்பு இருக்கானா?" என்று அவளது ஆங்கிலம் கலந்த தமிழில் கேட்க! ஒரு விசாரணை பார்வையோடு அம்மா அவளை ஏற இறங்க பார்த்து "டேய் சுப்பிரமணி! சுப்பிரமணி! இங்க ஏதோ ஒரு பொண்ணு..." "உன் பெயர் என்ன மா?" மார்டினா ஆண்ட்டி" "கிறிஸ்டியனா!! டேய் உன்ன பார்க்க மார்டினான்னு ஒரு பொண்ணு வந்திருக்கா டா.." அம்மா மார்டினா என்ற பெயரை சொன்னவுடன் என் துக்க தூக்கம் கலைந்து சடால் என்று உருண்டு பிரண்டு எழுந்தேன். அம்மா மறுபடியும் அங்கிருந்து கத்தினாள் "டேய்... வெளிய வரும் போது சட்டை போட்டு வாடா...பிறந்த மேனிக்கு வந்துர போற" என்று அம்மா கூற மார்டினா சிரித்தாள். அம்மாவும் சிரித்துக்கொண்டே "தமிழ் நல்ல தெரியுமம்மா!" "கொஞ்சம் கொஞ்சம் தெரியும் ஆண்ட்டி" என்று அவள் சிரித்துக்கொண்டே கூற, நான் அடித்து பிடித்து சட்டை அணிந்து வாசலுக்கு ஓடி வந்தேன். என் வரவை கண்டு அம்மா "பரவா இல்லை உடனே வந்துட்டே!!" என்று என்னை பார்த்தவாறு உள்ளே செல்ல, நான் அவளின் காதோரம் சென்று "தயவு செஞ்சு உள்ள போய்டு ஒட்டு கேட்காதே சரியா" என்று முணுமுணுத்தேன். அம்மா ஒரு முறை முறைத்து "ஏன்டா எனக்கு வேற வேலை இல்ல உன்ன ஒட்டு கேக்குறததுதான் வேலையா?" என்று சொல்லிக்கொண்டு உள்ளே சென்று திரும்பிப்பார்த்தாள். நான் மார்டினாவை பார்த்து "என்ன திடீர்ன்னு வீட்டுக்கு?" என்று நான் முடிப்பதற்குள் "நாம ஒரு வாக் போலாமா?" என்று கேட்க சரி என்று தலையசைத்தேன். அம்மா அங்கே காதை தீட்டி உட்கார, நான் "அசிங்கப்படுத்திட்டியே மா!!" என்று மனதில் நினைத்துக்கொண்டு மார்டினா முன் நடக்க நான் அவளை பின்தொடர்ந்தேன்.
நாங்கள் நடந்து நடந்து தேவாலய வாசலை அடைந்தோம். அதுவரை மௌனமாய் நடந்த நான் மௌனத்தை கலைத்தேன். நேற்று நடந்த சம்பவத்திற்கும் எனது செயலுக்கும் மன்னிப்பை தெரிவித்தேன் "நேத்து கொஞ்சம் டென்ஷன்ல இருந்தேன். அம்மா சும்மா திட்டிகிட்டே இருந்தாங்க. கோபமா வெளியே வந்தேன், வந்த இடத்துல விக்கி அப்பரும் ஆஷ்... சாரி மழை வேற பெஞ்சிதா... செம்ம கடுப்பாயிட்டேன்! அதுதான் கொஞ்சம் கோவமா பேசிட்டேன்...சாரி டா" நான் பேசிக்கொண்டே இருக்க அவள் சிரித்துக்கொண்டே பேசாமல் நடந்து வந்தாள். அவள் பேசாமல் நடந்து வர நான் திரும்பவும் பேச்சை ஆரம்பித்தேன். "எதுக்கு பேக்? டியூஷன் போறியா?" அவள் அதற்கு தலையசைத்து இல்லை என்று கூற, திரும்பவும் "அது தான் சாரி சொல்லிட்டேன்ல அப்புறம் ஏன் பேசாம வர..." என்று பாவமாய் முனகியவாறு சோகத்தோடு தேவாலய படியின் மீது உட்கார்ந்தேன். அவள் நேரே நடந்து தேவாலயத்திற்குள் சென்றாள். அவள் உள்ளே செல்ல நான் வெளிப்படியில் உட்கார்ந்துக்கொண்டு தேவனிடம் அவளது எல்லா ஆசைகளையும் நிறைவேற்றுமாறு வேண்டினேன். தேவாலய மணி அடித்தது.
நான் எழுந்து செல்ல நின்றபோது, பின்னாலிருந்து அவள் என் முதுகை தட்ட திரும்பினேன். என் கையில் அவள் பூங்கொத்தையும் அதன் மேல் காய்ந்த வாழ்த்தட்டையையும் வைத்தாள். அதைக் கண்டு நாவு தழுதழுத்தது, மூச்சு முட்டியது, நெஞ்சு படபடத்தது, பேச்சு குளறியது, தலை சுற்றியது, கீழே சரிந்து விழ போனேன், என்னை அவள் தாங்கி பிடித்தாள். என் கண்கள் அவள் கண்களோடு இணைந்தது. மொத்த உலகமும் நிசப்தமானது. அவள் என்னை இருகணைத்து இதழோரம் ஒரு முத்தம் தந்தாள். கையிலிருந்து பூங்கொத்தும் வாழ்த்தட்டையும் நழுவி தரையில் விழுந்தது. உலகம் சுழலுவது நின்றது. ஒரு நொடி நின்ற உலகம் அவள் என் கண்களை பார்த்து "I love You Too" என்று சொன்னவுடன் மீண்டும் வேகமாக சுழன்றது. சிரித்துக்கொண்டு என்னை விடுவித்து திரும்பிப் பார்த்துக் கொண்டு அவள் ஓடினாள். நான் பஞ்சு பறப்பது போல் பொறுமையாக தரையில் விழுந்தேன். கட்டாந்தரையில் பருவக் காதலோடு உருண்டேன், சிரித்தேன், உருண்டு உருண்டு பாதரின் காலடியில் சென்று விழுந்தேன். பாதர் என்னை பார்த்து முறைக்க "பிளஸ் பண்ணுங்க பாதர்" என்று கூறி காலை தொட்டு வணங்கி விட்டு அங்கிருந்து ஓடினேன்.
சினிமாவில் வருவது போல் என்னுள்ளம் சந்தோஷத்தில் பாடியது,
"ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்"
தொடரும்….
இப்படிக்கு,
- சுப்பு (எ) சுப்பிரமணி எழுத்து உங்கள், - ஷிவ் (எ) சிவராஜ் பரமேஸ்வரன்.
Comments