காதல் - அத்தியாயம் 6
- Sivaraj Parameswaran
- Jun 11, 2021
- 6 min read
Updated: Apr 8, 2024

மொட்டைமாடி தண்ணீர் தொட்டியின் மீதேறி உட்கார்ந்துக்கொண்டு ராயபுரம் துறைமுகத்தின் அழகை ரசிப்பது கொடுப்பினை என்றால் காதலிக்கும் பெண்ணின் கரங்கள் பிடித்து அவளது தோளில் சாய்ந்து இளங்காற்றை அனுபவிப்பதை என்ன வென்று சொல்லவேன். சைக்கிள் இருந்தும் இருவரும் சைக்கிளை தள்ளி நடந்தே பேசிக்கொண்டு மாதா தெருவை பலமுறை சுற்றி வருவோம் இதை விக்கி தன் வீட்டு மாடியிலிருந்து எனக்கு ஐந்து, ஆறு என்று சுற்றின் எண்ணிக்கையை சைகை காட்ட. அவள் அதை கண்டு சிரிக்க நான் அதை ரசிக்க அந்த ரசனையை நான் என்ன வென்று சொல்வேன்.
அவள் மொபெட் ஓட்ட நான் அவள் பின்னால் அமர்ந்து அவளோடு அங்காடிக்குச் செல்வேன். ஆங்கிலோ இந்தியன் என்றாலும் காய்கறி கடையில் பேரம் பேசி வாங்கும் சாமர்த்தியத்தை என் அம்மாவே ஒரு முறை மெய்த்துப் பார்த்தாள். காலம் போய போக்கில் அவள் எங்களுக்கும் சேர்த்து வாங்களானாள் அம்மாவிற்கு அவளை பிடித்திருந்தது, அம்மாவிடம் நன்றாக பழகினாள். நானும் அவள் பெற்றோருடன் நட்போடு பழகினேன். அவள் தந்தை முன்னோக்கு சிந்தனை உள்ளவர் எங்களை வேறுபடுத்தி பார்க்காமல் சமமாக நடத்தினார். சொல்ல போனால் என்னை அவர்கள் மகன் போலவும் அவளை எங்கள் வீட்டில் மகள் போலவும் பாவித்தனர். சந்தோஷத்தின் உச்சம் என்றே சொல்லலாம் நான், மார்டினா, விக்கி, லாவண்யா, BSA சைக்கிள், TVS மொபெட் இப்படி சந்தோஷமாக வாழ்ந்த என் வாழ்க்கையில் மீண்டும் ஒரு புயல் வீசத் தொடங்கியது.
+2 தேர்வு வந்தது. எல்லோரும் விழுந்து விழுந்து படித்தோம். குறிப்பாக மார்டினா NUS சென்று படிக்க வேண்டும் என்று வெறியாக படித்தாள். லாவண்யா அண்ணா பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற முனைப்போடு படித்தாள். நானும் விக்கியும் பாஸ் ஆனால் போதும் என்று படித்தோம். அதிலும் வேதியியலில் பாஸ்ஸாக வேண்டும் என்று படித்தேன். மற்றவையில் தேர்வாகும் நம்பிக்கை இருந்தது வேதியியலில் மட்டும் சந்தேகம் இருந்தது. அம்மா நான் +2 -வில் தேர்வாக விநாயகனுக்கு 21 தேங்காய் நேர்ந்தாள். தேர்வும் வந்தது எல்லோரும் நன்றாக எழுதினர், நானும் எழுதினேன். ஆனால் வேதியியல் பயம் மட்டும் விடவில்லை, இன்றளவும் என் கனவுகளில் அந்த பயம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
தேர்வு முடிந்த சந்தோஷத்தில் கடைசி நாள் சாயம் பூசி விளையாடினோம். பலரும் தங்கள் பெயரை மற்றவர் சட்டையில் எழுதினர். மார்டினா அவள் பள்ளியில் இருந்தாள் நாங்கள் எங்கள் பள்ளியில் இருந்தோம். விளையாடிக் கொண்டிருந்த எங்களை லாவண்யா தேடி வந்தாள். லாவண்யா பேச விக்கியின் முகம் மாறிக்கொண்டிருந்தது. என்ன என்று சென்று விசாரித்தேன். லாவண்யாவின் தோழி பிரியாவை அரசு கல்லூரி மாணவன் தியாகு அவனது கூட்டாளிகளுடன் எங்கள் பள்ளிக்குள் நுழைந்து கூட்டத்தோடு கூட்டமாக கலந்து அவளது மார்பில் கைவைத்து விட்டு அவளை பார்த்து சிரித்தவாறு அவளது பின்புறத்தை தட்டினான் என்று கூற நாங்கள் ஒரு நொடி கலங்கி போனோம். கொண்டாட்டம் நின்றது, லாவண்யா தலைமை ஆசிரியரிடம் சென்றாள். இதை அறிந்து PT மாஸ்டர் முத்துப்பாண்டி சார் ஓடிவந்தார். எங்களிடம் யாரென்று விசாரித்தார். கவுன்சிலர் பையன் என்று சொன்னோம் "எந்த மயிரா இருந்த என்னடா, சங்கருதிருக்கணும். எங்க வந்து என்ன பண்ணியிருக்கான் நீங்கெல்லாம் வேடிக்கை பார்த்திருக்கிங்க அசிங்கமா இல்ல உங்களுக்கெல்லாம். இதுவே உங்க தங்கச்சிகளுக்கு நடந்திருந்தா இப்படி தான் நிப்பீங்களா? மயிருங்களா நீங்க 250 பேரு இருக்கீங்க, அவிங்க வெறும் ஐஞ்சு பேரு தான்" முத்துப்பாண்டி சார் சொல்லத்தான் தாமதம். ஸ்போர்ட்ஸ் ரூமில் ஹாக்கி மட்டை கிரிக்கெட் மட்டை ஸ்டம்ப்கள் எல்லாம் காலியானது. சைக்கிள் வரி வரியாக பள்ளியிலிருந்து வெளியேறியது. கல்லறை சாலை மொத்தம் சைக்கிளாக இருந்தது. விக்கி கூட்டத்தை முன் நடத்தினான். நாங்கள் பின் தொடர்ந்தோம். முத்துப்பாண்டி வாத்தியார் பஜாஜ் M80-ல் பிரியாவை உட்காரவைத்து பின்னால் வந்தார்.
200 சைக்கிள் ராபின்சன் பூங்காவிற்குள் சர சர வென்று சென்றது. அங்கு கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தவர்கள் விளையாடுவதை நிறுத்தினர். அசம்பாவிதம் என்று புரிந்த ஒருவன் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தான். யமஹா RX100-ல் உட்கார்ந்து கொண்டிருந்த ஒருவனை பிரியா அடையாளம் காட்டினாள். தியாகு கூட ஆஷ்டன் உட்கார்ந்திருந்ததை நாங்கள் கவனித்தோம். முத்துப்பாண்டி சார் நேரே சென்று அவனது சட்டை காலரை பிடித்து பிரியா முன் வந்து நிறுத்தினார் "பிரியா இவனே அடிமா, டேய் அந்த ஹாக்கி ஸ்டிக்க அவ கிட்ட கொடுரா" என்று விக்கியை நோக்கி சொல்ல பிரியா தயங்கி ஒதுங்கி நின்றாள். தியாகு முத்துப்பாண்டி சாரின் பிடியில் திமிர "டேய் நான் யார் தெரியுமா? எங்கப்பா யாருன்னு தெரியுமா? த்தா என் பெயர சொன்ன காசிமேடே அதிரும்" இதை கேட்ட முத்துப்பாண்டி சார் ஓங்கி ஒரு அரை அறைந்து "இன்னும் எதாவது பேசுனே உங்கொப்பனுக்கும் விழும்" எலும்பும் தோலுமாக இருந்த தியாகு சுருண்டு கீழே விழுந்தான். அதற்குள் போலீஸ் அங்கு வர முத்துப்பாண்டி "இவ அவனை அடிக்குற வரைக்கும் எந்த தாயோளி மவனும் கிட்ட வராம பாத்துக்கோங்கடா" என்று எங்களை பார்த்து சொல்ல கூட்டம் திமிர்ந்தது. போலீசை கிட்டே வரவிடாமல் தடுத்தோம். தியாகுவின் கூட்டாளிகள் பயத்தில் அங்கிருந்து ஓடினர் ஆஷ்டன் எங்களை முறைத்துக்கொண்டே ஓடினான். "பிரியா நீ அடிமா! நான் பாத்துக்குறேன்!" என்று முத்துப்பாண்டி சார் சொல்ல, பிரியா ஹாக்கி மட்டையை விக்கியிடம் வாங்கி அந்த கல்லுளி மங்கனை அடித்து நொறுக்கினாள் முத்துப்பாண்டி சார் அவன் கையை பிடிக்க தியாகு கையை அடித்து உடைத்தாள். தியாகுவின் அலறல் சத்தம் ராபின்சன் பூங்காவில் எதிரொலித்தது. போலீஸ் கூட்டத்தை கலைத்து உள்ளே வர முத்துப்பாண்டி வாத்தியார் சிரித்துக்கொண்டே கண்ணடித்து பிரியாவிடம் "ஹாப்பியாமா!! இனி இத ஒரு கெட்ட கனவா நினச்சு இத்தோடு மறந்துடணும் சரியா!" என்று பிரியாவை பார்த்து அவர் கேட்க பிரியா சரி என்று தலையாட்டினாள். வழக்கம் போல் "பாய்ஸ் பேக் டு ஸ்கூல்" என்று சொல்லிக்கொண்டே விசில் அடித்துக்கொண்டு கூட்டத்தை கலைத்து விட்டு சென்றார். நாங்களும் கலைந்து பள்ளிக்கு திரும்பி வந்தோம்.
போலீஸ் பள்ளி முழுவதும் நிறைந்திருந்தனர். தலைமை ஆசிரியர் வெளியே நின்று போலீசுடன் வாக்குவாதம் செய்துக்கொண்டிருந்தார். முத்துப்பாண்டி சார் கோபமாக சீறிக்கொண்டிருந்தார். பிரியா உண்மையை எடுத்துரைக்க, உண்மை நிலை அறிந்து போலீஸ் முத்துப்பாண்டி சாருக்கு எச்சரிக்கை விடுத்து வந்த வழியே திரும்பச் சென்றனர். எங்களுக்கும் ஒரு அமைதி ஏற்பட்டது. முத்துப்பாண்டி சார் செய்தது தவறாகவே இருந்தாலும் அது பிரியாவை சாந்தப்படுத்தியது. அது எங்களை நிம்மதியடைய செய்தது. எல்லா குழப்பங்களும் தீர இனிதே எங்கள் பள்ளி தேர்வு முடிந்தது.
அடுத்த ஒரு மாதத்தில் லாவண்யாவும் மார்டினாவும் நுழைவு தேர்வுகளாக எழுதி குவித்தனர். நானும் விக்கியும் தெருவோரம் கிரிக்கெட் விளையாடி கொணடே இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வை வேண்டா வெறுப்பாக எழுதினோம். காலம் வேகமாக உருண்டோடியது.
+2 தேர்வு முடிவுகளும் வந்தன. 21 தேங்காய் நேர்த்திக்கடன் வேலை செய்தது. நான் 923 எடுத்து தேர்வானேன். மார்டினா 1149 எடுத்திருந்தாள். விக்கி 1024 எடுத்திருந்தான் லாவண்யா 1135 எடுத்திருந்தாள். லாவண்யா தான் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்று அழுது புலம்பினாள் மார்டினா அவளை சமாதானம் செய்ய நானும் விக்கியும் எரிச்சலில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
என்ன படிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க மார்டினா NUS-ற்கு முயற்சி செய்யுமாறு கூறினாள். நான் அவளை முறைத்துக்கொண்டு "நான் NUS-க்கு சும்மா காமெடி பண்ணாத, கெமிஸ்ட்ரில பாஸ் ஆகுறதுக்கு எந்த முக்கு முக்குனேன் எனக்கு மட்டும்தான் தெரியும்!!" "அப்போ நான் NUS போனா நீ என்ன பண்ணுவே?" என்று அவள் கேட்க "நான் எதாவது BSC இல்லே B.Tech எடுப்பேன்!" "அப்போ நம்ம லவ்?" சிரித்துக்ண்டே "நீ சிங்கப்பூர்ல ஒருத்தன பார்த்துக்கோ நான் இங்கயே ஒருத்திய பார்த்துக்குறேன்" என்று சொல்லி முடிப்பதற்குள் பளார் என்று ஒரு அரை விழுந்தது. கன்னத்தை பிடித்துக்கொண்டு என்ன என்று யோசிப்பதற்குள் இன்னொரு அரை இன்னும் பலமாக விழுந்தது. இம்முறை என்னை அடிதத்தில் அவள் கை வலித்தது. அவள் கையை குடைந்தது கொண்டிருக்க நான் நட்சத்திரங்கள் பறக்க தண்ணீர் தொட்டியின் மீது சாய்ந்து படுத்தேன். திரும்பவும் என் சட்டை காலரை பிடித்து இழுத்து அடிக்க அவள் கை ஓங்க, "நான் சும்மா லோலோலாயக்கு சொன்னேன் மா, அதுக்கு போய் இப்படி எல்லாம் அடிக்கலாமா!! வலிக்குதுலே!!" என்று கலங்கி பொய் சொன்னேன். அவள் ஆங்கிலத்தில் கெட்டை வார்த்தையால் அபிஷேகம் செய்தாள்.
நான் அவளை இவ்வளவு கோபமாக அன்று தான் பார்த்தேன். அவள் கோபம் தீராமல் என் தொடையை கிள்ளினாள், ஐயோ என்று கத்த என் வாயை பொத்தி வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டாள். அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல், கட்டி அணைத்து இறுக உதட்டோடு ஒரு முத்தம் கொடுத்தேன். கோபம் தணியாமல் என் உதட்டை கடித்தாள். வலியின் சுகத்தை அன்றறிந்தேன். யாரோ என் சட்டை பிடித்து இழுப்பது போல் தோன்றியது, முத்தம் கொடுக்கும் சுகத்தில் பிடித்த கையை தட்டிவிட்டேன். சடாலென்று என்னை ஒருவர் கீழே இழுக்க, நான் உருண்டு கீழே விழுந்தேன். சுதாகரித்து எழுந்து பார்த்தபொழுது, மார்டினாவின் அப்பாவும் அம்மாவும் ஆஷ்டனுடன் அங்கு நின்றிருந்தனர். ஆஷ்டன் என்னை பார்த்து சிரிக்க மார்டினாவின் தந்தை அவளை பளார் பளார் என்று அரைவதை பார்த்தேன். அதை தடுக்க நான் முயல "I treated you like a son and you do this to me" என்று கூறி எனக்கு ஒரு குத்துவிட்டார், தாடையில் பல் விலகியது, மறு குத்தில் கண்கள் கறுத்தது. விவரம் அறிந்து விக்கியும் லாவண்யாவும் ஓடி வர, என்னை அடிப்பதை நிறுத்தினார். நான் தரையில் சுருண்டு விழுந்தேன். "I trusted you and you broke my trust" என்று என்னை பார்த்து கத்தியவாறு மார்டினாவை அங்கிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். அவரின் வலி அதில் தெரிந்தது. கண்கள் இறுக இருட்டானது.
விக்கி என்னை கை தாங்களாக எழுப்ப லாவண்யா என் அம்மாவிடம் விவரத்தை சொல்லி அங்கு அழைத்துவந்தாள். என் கோலத்தை கண்டு அம்மா கதறி அழ. எல்லோரும் என்னை தாங்கிக்கொண்டு வீட்டிற்கு கொண்டு சென்றனர். மயக்கத்தில் தூங்கிப்போனேன். அப்பா தனது டாக்டர் நண்பருடன் வந்தார். என்னை பார்த்து டாக்டர் பயப்படும்படி ஒன்றும் இல்லை இன்ஜெக்ஷனும் மாத்திரையும் கொடுத்து தூங்குமாறு அறிவுறுத்தி சென்றார். அவர் சென்ற பிறகு அப்பா வந்து அருகில் உட்கார்ந்தார். மௌனத்தில் நிமிடங்கள் கடந்தன. அப்பா ஏதும் பேசாமல் எழுந்து செல்ல, நான் "சாரிப்பா, தெரியாமா..." என்று இழுத்தேன் "டேய் நீ இதுக்கு எதுக்கு டா சாரி கேக்குறே? இது இந்த வயசுல இயல்பு டா!! நீ ஒன்னும் வலுக்கட்டாயமா பண்ணுல! it was mutual!" நான் கண்கள் விரிய அப்பாவை ஆச்சரியமாக பார்த்தேன், அவர் ஆங்கிலம் பேசி நான் இதுவரை கேட்டதில்லை "But again, இப்போ அதற்கான டைம் இல்லை! இப்போ நீங்க இரண்டு பேரும் நல்ல படிக்கணும்! படிச்சு முடிச்ச பிறகும் உங்களுக்கு இதே உணர்ச்சிகள் இருந்தால் அப்போ பார்த்துக்கலாம்! இன்னும் நிறைய டைம் இருக்கு சரியா!! நீ இப்போ எத பத்தியும் யோசிக்காம ரெஸ்ட் எடு. மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்" என்று சொல்லி நேரே விக்கியை நோக்கி சென்றார்.
விக்கியை அழைத்துக்கொண்டு அப்பா மார்டினா வீட்டிற்கு சென்று கதவை தட்ட, அவள் தந்தை கதவை திறந்தார். சிரித்த முகத்துடன் உள்ளே சென்று மார்டினாவின் நலம் விசாரித்தார். நடந்ததை ஒரு இயல்பான வயசின் ஈர்ப்பாக எடுத்துரைத்தார். இதை கேட்டு கோபமான மார்டினாவின் தந்தை எரிந்து விழுந்தார். அப்பா எவ்வளவு எடுத்துரைத்தும் அவர் கோபம் தணியாமல் கடிந்து கொண்டிருந்தார். கடைசியாக அப்பா வெளியே வரும் பொழுது "சார் ஒரு பொண்ணோட தகப்பனா நீங்க செஞ்சது சரிதான், உங்க இடத்துல நான் இருந்தாலும் அதையே தான் செஞ்சிருப்பேன், இல்லேன்னு சொல்லலே! ஆனாலும் கொஞ்சம் நிதானமா யோசிச்சு கொஞ்சம் பொறுமையா முடிவெடுங்கன்னு சொல்றேன். இன்னும் ஒரு வருஷத்துல இரண்டு பேரும் மேஜர் ஆகிடுவாங்க! நல்லது கெட்டது அவங்களுக்கும் தெரியும். அவங்க வயசுல அவங்கள பிரென்ட்லியா டிரீட் பண்ணா கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க சார்" "அதெல்லாம் எங்களுக்கு தெரியும் முதல்ல நீங்க உங்க பையன ஒழுங்கா வளர்க்க பாருங்க எங்க பொண்ண நாங்க பாத்துக்குறோம்" என்று கூறி கதவை நோக்கி கை காட்டி அப்பாவை வெளியேறுமாறு கூறினார். அப்பாவும் நிலைமை அறிந்து மௌனமாய் வெளியேறினார். நாங்கள் வெளியே வரும் பொழுது ஆஷ்டன் அங்கு வர விக்கி இவன் தான் அந்த போட்டுக்கொடுத்த ஆசாமி என்று கை காட்ட, அப்பா அவனது காலரை பிடித்து சப் சப் என்று நான்கு அரை வைத்தார். நிலை தடுமாறி அவன் கீழே விழ மார்டினாவின் தந்தை ஓடி வர "சார் இதுக்குள்ள நீங்க வந்துராதீங்க அப்பரும் நல்ல இருக்காது!!" என்று அப்பா கை காட்ட மார்டினா அப்பா திகைத்து நின்றார். ஆஷ்டனை தூக்கி நிறுத்தி அப்பா "தம்பி இதோட நம்ம கணக்கு முடிஞ்சுபோச்சு!! இல்ல நான் கவுன்சிலர் பையன் பிரெண்டு, காலேஜ் ரவுடி, ஏரியா பசங்கள கூட்டாந்து சீன் காட்டவேன்னு வந்தா!! வகுந்துருவேன் வகுந்து!! அடுத்த முறை வரதற்கு முன்னாடி சிவா சுந்தர நாடார் யாருன்னு கேட்டுட்டு வா சரியா!!" "போய்ட்டு வரேன் சார்" என்று மார்டினாவின் அப்பாவிற்கு கை காட்டி விக்கியை கூட்டி வெளியேறினார். விக்கி இதை என்னிடம் சொல்ல அப்பாவை எண்ணி பெருமை கொண்டேன். நான் முற்போக்கு சிந்தனையாளர் என்று எண்ணிய மார்டினாவின் தந்தை பிற்போக்காகவும், பிற்போக்கு என்றெண்ணிய என்தந்தை முற்போக்காகவும் சிந்தித்தது, படிப்பு ஒரு தவறான அளவுகோல் என்பதை எனக்கு உணர்த்தியது.
மறுநாள் லாவண்யா ஓடி வந்து மார்டினா வீட்டை காலி செய்து வெளியேறி கொண்டிருப்பதாகவும். இன்னும் சில மாதங்களில் குடும்பத்தோடு சிங்கப்பூரில் குடியேற போவதாகவும் தெரிவித்தாள். நான் வீங்கிய கன்னத்தோடு வாசலுக்கு வர அப்பா அங்கே செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார். என்னை கண்டதும் என்ன என்று விசாரிக்க விக்கி விஷயத்தை சொல்ல, கீழே போக வேண்டாம் மொட்டைமாடியிலிருந்தே பார்க்குமாறு சொன்னார்.
மொட்டை மாடியில் இரண்டாம் நிலை வரை வளர்ந்த மரத்தின் மறைவு கொண்டு மார்டினாவை பார்ப்பதற்காக எட்டி பார்த்தேன். அவள் தந்தை சாமான்களை வண்டியில் ஏற்றிக்கொண்டிருக்க, கண்கள் மார்டினாவை தேடியது. சற்று நேரம் கழித்து மார்டினாவும் அவளது அம்மாவும் மாருதி 800 காரில் ஏறிக்கொள்ள மார்டினாவின் தந்தை சாமான்கள் ஏற்றிய வண்டியில் ஏறி உட்கார்ந்து புறப்படுமாறு சொன்னார். சாமான் ஏற்றிய வண்டி புறப்பட மாருதி கார் அந்த வண்டியை பின் தொடர்ந்தது. கண்கள் ஈரமானது, எதுவும் பேசாமல் அங்கே உட்கார்ந்தேன், முதல் முறை தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தேன்.
சில நிமிடங்கள் கடந்த நிலையில் விக்கி என்னை பலமாக குலுக்க, தலை நிமிர்ந்து பார்த்தேன். மார்டினா மொட்டைமாடியில் நின்றுகொண்டிருந்தாள் மார்டினாவின் அம்மா "5 Mins" என்று சொல்ல மார்டினா என் அருகே ஓடி வந்தாள். அம்மா அருகில் இருக்க தள்ளியே நின்றாள். 5 நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. 5 நிமிடங்கள் கழித்து அவள் அம்மாவுடன் காரில் கண்ணீரை துடைத்து சிரித்தவாறு என்னை பார்த்து கை அசைத்து சென்றாள். விக்கி ஒன்றும் புரியாமல் என்னை பார்க்க நானும் கண்ணை துடைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தேன். விக்கி என்னை பார்த்து "நீங்க பேசிக்கவே இல்ல, அப்பரும் இதுக்கு இந்த சிரிப்பு?" "அது உனக்கு புரியாது!" "பரவாயில்ல சொல்லு புரிஞ்சுக்குறேன்" "என்ன NUS வர சொல்லறா நானும் வரேன்னு சொல்லிட்டேன்!" விக்கி புரியாமல் முழிக்க. நான் தெளிவோடு வீட்டை நோக்கி நடந்தேன்...
தொடரும்...
இப்படிக்கு
- சுப்பு (எ) சுப்பிரமணி எழுத்து உங்கள், - ஷிவ் (எ) சிவராஜ் பரமேஸ்வரன்.
Comments