top of page

வயதில்லா காதல் தோல்வி

  • Sivaraj Parameswaran
  • Sep 23, 2021
  • 2 min read

Updated: Jul 17, 2023



எனது 74 வயதில் எனது முதல் காதலை மன்னிக்கவும் எனது உண்மை காதலை மீண்டும் மன்னிக்கவும் இதை நான் எப்படி சொல்வது? நான் காதலித்து காதலை சொல்லாமல் சொல்லி! அவள் என்னை வெறுக்காமல் வெறுத்து! ஒருவர்க்கொருவர் பேசி பேசாமல் இருந்து! இன்றளவும் எதிரும் புதிருமாய் வேண்டாதவர்களாய் இருக்கும் நாங்கள்! இல்லை இருக்கும் நான்!! நான் இப்படி இருக்கக்காரணம் எனது ஈகோ! அது மட்டுமல்லாமல் புறணி பேசுவது, ஆணவம் பேசுவது, ஆண் ஆதிக்கத்தோடு பேசுவது என என்னை தலைகுனியாமல் தலை நிமிர்ந்து நிர்க்கச் செய்தது என் கர்வம்.


இன்றும் என் 74 வயதிலும் என் கர்வம் என்னை விட்டு போக வில்லை! மீனாட்சி என்னை விட்டு தனியாக வேற்றுகிரகம் சென்று மன்னிக்கவும் சொர்கம் சென்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிற்று! அவளின் நினைவை மறந்து வாழ பழகிக்கொண்டிருந்தேன். மகனும் மகளும் அமெரிக்காவில் குடியேறி விட்டனர்! இந்தியாவை குறைகூறி அங்கு இந்திய சமாஜின் தலைமை பொறுப்பில் இருக்கின்றனர். அது என்ன கருமமோ! நமக்கு என்ன? நாம நம்ம கதைக்கு வருவோம்!


இப்படி தனிமையில் வாழும் நான் கோவையில் உள்ள முதியோர் வாழும் உயர்தர பிளாட் ஒன்றை விலைக்கு வாங்கி குடியேறினேன்! 2 bedroom பிளாட்! சகல வசதிகளும் கொண்ட அந்த பிளாட்டில் தனிமையை உணர்ந்தேன்! என்னை பார்த்துக்கொள்ள ஆட்கள் இருந்தாலும் பேசவோ சிரிக்கவோ விசாரிக்கவோ யாரும் இல்லை. வரும் நர்ஸும் டாக்டரும் அவர்களுக்குள் கொஞ்சி குலாவி கொள்கிறார்களே ஒழிய என்னை யாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் நான் ஒரு முடிவு எடுத்தேன்! எனது பிளாட்டில் உள்ள ஒரு அறையை வாடகைக்கு விடலாம் என்று! நான் எடுத்த முடிவுகளிலே மிகவும் அபத்தமான முடிவு அது!! ஆம் எனது கூட்டாளியாக வாடகைக்கு எனது பிளாட்மேட்டாக வந்தது மோனிஷா.


மோனிஷா தான் நான் காதலித்து காதலை சொல்லாமல் சொல்லி, சரி அதை பற்றி பேசி என்ன பயன்! இதில் ஒரு நன்மை என்ன வென்றால் மோனிஷாவிற்கு பழையது எதுவும் ஞபாகம் இல்லையாம் இதை அவள் மகள் தருணி என்னிடம் சொல்ல கேட்க இனிமையாய் இருந்தது என்னை அறியாமல் ஒரு சிரிப்பு சிரித்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தருணி அச்சு அசலாக மோனிஷா போலவே இருந்தாள் அதே அழகிய கண்கள் அதே உதடுகள் அதே நடை அதே சிரிப்பு, ஒரு நொடி நான் மோனிஷாவை கல்லூரி காலத்தில் பின் துரத்தி அவளின் பார்வைக்காக ஏங்கியது ஞாபகத்திற்கு வந்தது. சட்டென்று தருணி "தாத்தா நான் அம்மாவை கூப்பிட்டு வந்துடுறேன்" என்று சொல்ல என் முகம் கறுத்தது! நான் தாத்தாவா? அவங்க அம்மா மட்டும் குமரியா? ஏகதாளத்தை பாரு! அம்மாக்கு பொண்ணு தப்பாம பொறந்திருக்கா!! கட்டுக்கடங்கா கோபத்துடன் பால்கனிக்கு சென்று மோனிஷாவை பார்க்க எட்டி பார்த்தேன். வயதானாலும் அதே மிடுக்குடன் கட்டுக்கோப்பாக இருந்தாள். முகம் தெளிவாக தெரியவில்லை எட்டி பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று அவள் மேலே பார்க்க எனக்குள் ஒரு எதிர்வினை செயல்பட்டு சின்ன குழந்தை ஒளிவது போல் ஒளிந்து கொண்டேன். நெஞ்சு படபடத்தது குப்பென்று வேர்த்தது! நேரே சென்று டேபிளில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்தேன். சற்று நிதானமானேன்!


லிப்ட் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கண்ணாடியில் முகம் பார்த்தேன் தலை முடியை சீவி கொண்டேன். முகத்தை இருமுறை துடைத்துக்கொண்டேன்! இருதயம் மறுபடியும் படபடத்தது. டிங் டோங் என்று பெல் அடித்தது! தருணி கதவை திறந்து பெட்டியுடன் உள்ளே வர மோனிஷா பின் தொடர்ந்தாள்! என் நெஞ்சின் படபடப்பு அதிகரித்தது. கல்லூரியில் கண்டது போல் அதே பொலிவுடன் அவள் எதிரில் நிற்க தருணி பேசுவது என் காதில் அடைத்தது போல் விழுந்தது!! "அம்மா இவருதான் மிஸ்டர் சரவணன்" என்று அவள் என்னை அறிமுகம் செய்ய மோனிஷா என்னை உற்று பார்த்துக்கொண்டே இருந்து, "உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே" என்று கூற, நான் சிரித்துக்கொண்டே வேர்க்க ஆரம்பித்தேன் "நான் காலேஜ் படிக்குற காலத்துல என் பின்னாடி ஒரு பொறுக்கி பையன் சுத்திகிட்டு இருந்தான் அவன் பேருகூட உங்க பேரு தான், சரவணன் குஞ்சிதபாதம்!" எனக்கு நெஞ்சு அடைத்து தலைசுற்றுவது போல் இருந்தது. எல்லாம் மறந்த இவளுக்கு இது மட்டும் நல்ல ஞாபகம் இருக்கு பாருங்களேன்! இந்த பொண்ணுங்களே இப்படி தான் என்று நினைத்துக்கொண்டிருக்க என் கல்லூரி காலத்தில் கேட்ட அந்த ஹிந்தி பாடல் கேட்டது,



"Why Did You Break My Heart?
 Why Did We Fall In Love?
 Why Did You Go Away, Away, Away, Away?

 Dil Mera Churaaya Kyoon
Jab Yeh Dil Todna Hi Tha
 Humse Dil Lagaaya Kyoon
 Humse Munh Modna Hi Tha....."  

அந்த பாட்டு எங்கோ கேட்க கண்கள் இறுகியது, இடது கை வலித்தது. நெஞ்சு அடைத்தது! கண்கள் இறுகி இருட்டாகியது.


தூரத்தில் வெளிச்சம் தெரிய கண்கள் திறந்தேன்! நீல நிற வானம்! வெள்ளை மேகம்! பச்சை புல் தரை! மீனாட்சி சேப்பியன்ஸ் புக் படித்துக்கொண்டிருக்க நான் அவள் மடியில் படுத்து கிடந்தேன்! பக்கத்தில் கார்வான் ரேடியோவில் பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது...


யோவ் கதை எழுதுறவரே! இப்போ நீ என்ன சொல்லவரே? சரவணன் செத்துட்டானா? இல்லே இதெல்லாம் வெறும் கனவா?


எதுவும் சொல்லாமல் எழுதிய,

சிவராஜ் பரமேஸ்வரன்!

Bình luận

Đã xếp hạng 0/5 sao.
Chưa có xếp hạng

Thêm điểm xếp hạng
bottom of page