top of page

மீரா Talks

  • Sivaraj Parameswaran
  • Jun 28, 2023
  • 6 min read

Updated: Apr 8, 2024


உலகின் அந்த மூலையிலிருக்கும் பனிப்பிரதேசத்திலிருந்து மீராவிற்கு ஒரு ஈமெயில்(மின்னஞ்சல்),


அன்புள்ள மீரா,


என் வாழ்நாளில் நான் முதன் முதலில் தமிழில் எழுதும் ஈமெயில் அதுவும் முகம் தெரியாத ஒருவருக்கு முதல்முறையாக எழுதுகிறேன். அலாஸ்காவின் தனிமையில் வாடும் எனக்கு ஒரு பேச்சுத்துணை நண்பரை போல் உணர்த்தியது உங்கள் மீரா Talks podcast தான். நீங்கள் பேசிய தனிமையின் நிலை என்னால் உணரமுடிந்தது.


உங்களின் எல்லா podcast-களையும் கேட்டேன்! எல்லாவற்றிலும் ஒரு வித சோகம் தொற்றுக்கொண்டிருப்பதை நன்றாக உணரமுடிகின்றது! ஏன் இந்த சோகம் என்று கேட்க நா துடித்தாலும் பண்பு மறுக்கின்றது! சுற்றும் ஆயிரம் ஆட்கள் இருந்தும் தனிமையை உணர்வதென்பது கொடுமையிலும் கொடுமையான நிலை.


பணத் தேவை காரணமாக இந்த பனிப்பிரதேச பாலைவனத்தில் உற்றார் உறவாரற்று வாடிக்கொண்டிருக்கின்றேன். சுருக்கமாக சொன்னால் நான் இன்று இறந்தாலும் Nemo-வை தவிர எனக்காக கண்ணீர் வடிக்க ஆளில்லை. நான் இறந்தேன் என்று வெளியுலகம் அறிய எத்தனை நாள் ஆகுமோ என்னவோ? என் பிணத்திற்கு நானே ஆவியாய் காவல் காக்கும் நிலை கூட வரலாம்...ஹாஹாஹா! இதை ஒரு கடி ஜோக்காக படிக்கவும்!!


என் சோகக்கதையை சொல்லி உங்களை போர் அடிக்க விரும்பவில்லை. நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுத முதல் காரணம் நன்றி சொல்லத்தான். மதிப்பிற்குரிய மீரா அவர்களே நீங்கள் செய்யும் இந்த podcast-ற்கு என் மனமார்ந்த உளமார்ந்த நன்றிகள். மேலும் மேலும் நீங்கள் பேச வேண்டும். எங்களை போன்ற வெளியூர் வாழ் அகதிகளுக்கு உங்களை போன்றோரின் பேச்சு மனதிற்கு இதமாகவும் உறுதுணையாகவும் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் பணியை இடைவிடாமல் தினமும் தொடர இறைவனை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன்.


இப்படிக்கு உங்கள் குரலின் ரசிகன்,

ஆனந்த் மஹேந்திரன்.


பின் குறிப்பு : முக்கியமாக என் ஆழ்மனதிலிருந்து ஒன்று சொல்ல வேண்டும், தையை கூர்ந்து என்னை தவறாக நினைக்க வேண்டாம்!! என் மனதில் ஏதோ உங்களிடம் ஒரு இனம் புரியாத ஒரு ஈர்ப்பு! உங்களை நான் பார்த்ததும் இல்லை உங்களிடம் நான் பேசியதும் இல்லை இருப்பினும் உங்கள் குரலை கேட்டபின் ஏதோ ஈராயிரம் முறை பேசி பழகியதோர் உணர்வு. அந்த பெயரற்ற உணர்விற்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியவில்லை! ஒரு பெண்ணிடம் கேட்க கூடாத கேள்வி தான் இருந்தும் என்னால் அதை கேட்காமல் இருக்க முடியவில்லை!! மன்னிக்கவும் உங்கள் வயதென்ன? இவ்வளவு முதிர்ச்சி எப்படி அந்த இளங்குரலில் என்ற கேள்விதானே தவிர வேறொன்றுமில்லை...


கோபித்துக்கொள்ள வேண்டாம்!

திரும்பவும்,

ஆனந்த் மஹேந்திரன்.


உலகின் இந்த மூலையில் இருக்கும் சென்னையில்,


கிறிஸ்டினாவின் மொபைல் போனிற்கு ஈமெயில் நோட்டிபிகேஷன் வருகின்றது. நோட்டிபிகேஷன் சத்தம் கேட்டு தூக்க கலக்கத்தில் அருகிலிருக்கும் ஐபோனை எடுத்து பார்க்கின்றாள். யாரோ தனது பிரைவேட் ஈமெயில் ஐடிக்கு ஈமெயில் அனுப்பியுள்ளதை பார்த்து ஆச்சரியம் கொள்கின்றாள். சாதாரணமாக podcast-ற்கு comment செய்வதுடன் மக்கள் நிறுத்தி விடுவார்களே! இம்முறை ஒருவர் என் ஈமெயிலை கண்டுபிடித்து தனக்கு மெயில் அனுப்பியது கிறிஸ்டினாவிற்கு ஒரு வித ஆர்வத்தை தந்தது. மீராவை ஒருவர் தேடி கண்டுப்பிடிக்கும் ஆர்வம்! அந்த ஆர்வம் கிறிஸ்டினாவாகிய மீராவிற்கு ஒரு வித புத்துணர்ச்சியை தந்தது! தந்தும் என்ன பயன்? அவளாள் அந்த புத்துணர்ச்சியை கொண்டாட இயலாது, காரணம் அது கிறிஸ்டினாவின் பெயரில் உருவாக்கப்பட்ட podcast அல்ல மாறாக யாருக்கும் தெரியக்கூடாது என்று மீரா என்ற பெயரில் ரகிசியமாக உருவாக்கப்பட்ட podcast. இந்த podcast-ல் மீராவாக இருக்கும் கிறிஸ்டினா! தனது சொந்தங்களுக்கும் பந்தங்களுக்குத் தாந்தான் அந்த மீரா என்று தெரியாதவாறு பார்த்துக்கொண்டாள். ஏன்? ஏன் அப்படி பார்த்துக்கொண்டாள்? என்ன காரணம்? கிறிஸ்டினா யார்?


சென்னையின் பெயர் சொல்ல கூடாத ஒரு மிகப்பெரிய கெமிக்கல் கம்பெனியின் முதலாளியும் CEO-வாகவும் இருப்பவர் கிறிஸ்டினா. கணவர் ஜேம்ஸ் அதே கம்பெனியின் MD-யாக இருக்கின்றார். கிறிஸ்டினாவின் சொல்லுக்கு மறு சொல் பேசாதவர். சொந்தமும் சொத்தும் விட்டு போகாமலிருக்க கல்யாணம் என்ற பெயரில் செய்துவைத்த உடன்படிக்கை இது! இந்த உடன்படிக்கை தாம்பத்தியத்தில் தெரேசா ஜான் என இரு குழந்தைகள் பிறந்தனர். தெரேசா சிங்கப்பூரில் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டும், ஜான் அதே கல்லூரியில் முதல் ஆண்டும் படிக்கின்றனர்.


குழந்தைகளுக்கு அப்பா பிடிக்குமா அம்மா பிடிக்குமா என்று கேட்டால் அப்பா தான் பிடிக்கும் என்று சொல்லும் அளவிற்கு கிறிஸ்டினா அன்பானவள். இந்த அன்பிற்கு கிறிஸ்டினாவை குறை சொல்லி குற்றமில்லை, அவள் தந்தை மார்ட்டின் கேப்ரியலை தான் குறைக்கூறவேண்டும். தனக்கு பின் தன் சொத்தை பார்த்துக்கொள்ள ஒரு ஆண் மகன் இல்லையே என்ற வருத்தத்தை போக்க கிறிஸ்டினா மாற வேண்டியிருந்தது. அந்த மாற்றம் அவரை ஒரு தொழில் சாம்ராஜ்யத்தின் தலைவியாக மாற்றியது! 1000 பேர் வேலை செய்யும் கிறிஸ்டினாவின் அலுவலகம் அவர் வருகிறார் என்றால் அதிரும்! கிறிஸ்டினா வீட்டிற்கு வருகிறார் என்றால் வீடும் அதிரும், கூட குழந்தைகளும் கணவரும் சேர்ந்து அதிர்வார்கள். அதன் விளைவு கிறிஸ்டினாவின் மரியாதை மிகுந்த தனிமை.


ஆரம்பகாலத்தில் பாதிப்பேதும் இல்லாத இந்த மரியாதை! காலப்போக்கில் பயமாக மாரி பிறகு இடைவெளியாக மாறத்துடங்கியது! அந்த இடைவெளி இன்று தனிமையாய் மாரி கிறிஸ்டினாவை தனி மரமாக்கியது! தந்தைக்காகவும், குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் உழைத்து இளமை காலத்தை மறந்த கிறிஸ்டினா ஒரு முறை மகளிடம் பேசும் பொழுது மகளும் மகனும் அடுக்கிய குற்றங்கள் அவளை நிலை குலைய செய்தது, அதில் சில வரிகள் "பணம் பணம் பணம்ன்னு நீ இருந்துட்டே! அப்பா மட்டும் எங்கள கவனிக்கலேன்னா? எங்க நிலை என்னவாகியிருக்கும்? ஒரு வாட்டியாவது எங்க Annual day function-க்கு வந்திருக்கியா? ஒரு வாட்டியாவது எங்க PTA meeting-க்கு வந்திருக்கியா? எல்லாவாட்டியும் அப்பா தானே வந்திருக்காரு!! ஒரு வாட்டியாவது எங்க friends-அ மீட் பண்ணியிருக்கியா? அவங்க யாரு என்னென்னு தெரியுமா? குழந்தைகளை பெத்தா மட்டும் போதாது கஷ்டப்பட்டு வளர்க்கவும் தெரியணும்!!" இவை அனைத்தையும் கேட்டு எந்த ஒரு பதில் பேசாமல் இருந்திருந்த ஜேம்ஸை கண்டு கிறிஸ்டினா கோபமுற்றாள்! மகளின் கேள்விக்கு என்ன பதில் பேசுவது என்று தெரியாமல் நடந்தவற்றை யோசிக்கலானாள்!!


தொழிற்சாலை வேண்டாம் குழந்தைகள் போதும் என்று கம்பெனியை ஜமேஸிடம் ஒப்படைத்து வந்த பிறகு கம்பெனி நஷ்டத்தின் விளம்பிற்கு செல்கின்றது!! இந்த நஷ்டத்திற்கு காரணம்? ஜேம்ஸ் முட்டாள்தனமாக தன்னிச்சையாக செயல்பட்டது! அதற்கு கொடுக்க நேர்ந்திருக்க வேண்டிய விலை, கம்பெனியில் வேலை பார்க்கும் 1000 தொழிலாள குடும்பங்களின் வேலை இல்லா நிலை தான். இதனை கருத்தில் கொண்டு ஜான்னை வயிற்றில் சுமந்து கொண்டு மீண்டும் கம்பெனியின் பாரத்தை சுமக்களானாள்! இரவு பகலாக உழைத்து கம்பெனியின் நிலையை சரி செய்தாள்! அதை பறைசாற்றும் விதமாக அன்பு மகள் தொடுத்த கேள்விகள் பாவம் கிறிஸ்டினாவின் இதயத்தை நொறுங்கச்செய்தது.


அன்பு மகளுக்கு தெரியாது கிறிஸ்டினா ஒவ்வொரு முறை PTA meeting முடிந்து பிறகு பின்னொரு நாள் தனியாக டீச்சரை சந்திதித்ததும் மக்களை பற்றி விசாரித்தும், Annual Day function-ற்கு லேட்டாக வந்தாலும் குழந்தைகளின் programa-ஐ அவள் ஒருபோதும் தவரநேர்ந்ததில்லை! தாயாக அவள் அன்பை எல்லோற்போல் வெளிக்காட்டிக் கொள்ளவில்லையெனினும் அந்த புனிதமான அன்பிற்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டாள். தினமும் பிள்ளைகளை பற்றி ஜேம்ஸிடம் விசாரித்த பின்னரே தூங்கச்செல்வாள். இன்றும் அதைத்தான் செய்கின்றாள்! குழந்தைகளுக்கும் கணவருக்கும் தான் கட்டி காப்பாற்றிய கம்பெனிக்கும் இப்பொழுது தேவை பணமே! இனி இந்த கிறிஸ்டினா தேவை இல்லை என்று உணர ஆரம்பித்த தருணம் அவள் தனிமையை அவளுக்கு உணர்த்தியது!


இந்த தனிமை நிலையை போக்க ஏன் அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது என்று தோன்றிய சிந்தனையை podcast-ல் மீராவாக உயிர் கொடுத்தாள். அந்த உயிருக்கு கிடைத்த பரிசு அளவில்லா அந்நியகர்ளின் அறிமுகமும் அவர்களின் கமெண்ட்ஸ்சும். சிலர் கிறிஸ்டினாவின் குரலை ரசித்து கமெண்ட்ஸ் பதிவிட்டனர் வேறு சிலர் அவரை சைக்கோ என்று பதிவிட்டனர் முக்கால்வாசி பேரோ sexy என்று பதிவிட்டனர். பல கமெண்ட்டுகளை ரசித்தும் சில கமெண்ட்டுகளுக்கு முகம் சுளித்தும் சிலவற்றிற்கு கோபம் கொண்டும் வேற சிலவற்றிற்கு வெட்கமும் கொண்டாள். அவளின் பெண்மையையின் சுதந்திரத்தை முதல் முறையாக சுதந்திரமாக எந்த ஒரு தங்கு தடையுமின்றி மீராவாக விரும்பி அனுபவிக்க தொண்டங்கினாள்.


இன்று, ஆனந்த் அனுப்பிய ஈமெயிலை கிறிஸ்டினா படிக்க படிக்க அவள் கண்கள் விரிந்தது, உதட்டோரத்தில் புன்னகையும் மலர்ந்தது. "பெண்ணின் வயதை கேட்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்களா?" என்று தனக்குத்தானே முணுமுணுத்து பேசிக்கொண்டாள். ஒரு புது வித உணர்வை முதல் முறையாக உணர்ந்தாள். என்ன பதில் அனுப்பலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தாள்! தூக்கம் கெட்டு balcony-ல் வந்து அமர்ந்து ஆனந்திற்கு பதில் அனுப்ப type செய்ய ஆரம்பிக்கின்றாள்! இரவு 12 மணிக்கு ஆரம்பித்த இந்த typing விடியற்காலை 5 மணி ஆகியும் முடியாமல் இருக்கின்றது. கிறிஸ்டினா மீண்டும் மீண்டும் எழுதுவதும் மீண்டும் மீண்டும் அதை திருத்துவதுமாக இருந்து கடைசியாக 6.30-ற்கு பதில் ஈமெயில் ஆனந்திற்கு அனுப்புகின்றாள். சூரியன் உதிக்க அவள் முகம் பல வருடங்கள் கழித்து புதிய பொலிவுடன் ஜொலிக்கின்றது.


உலகின் அந்த மூலையிலிருக்கும் பனிப்பிரதேசத்தில்,


பூ போல் விழும் வெள்ளை பணியை கையால் பிடித்து ரசித்துக்கொண்டிருந்தான் டேனியல். Nemo என்று கத்த, அவனது செல்ல 1 வயது லாப்ரடார் நாய்குட்டி வாயில் பந்தை வைத்து அவனிடம் ஓடிவருகின்றது. கதவின் வெளிப்புறம் wheel Chair-ல் உட்கார்ந்திருக்க Nemo தாவி டேனியலின் மடி மீது ஏறி அமர்ந்துகொள்கின்றான். பைக் accident-ற்கு பின் இடுப்பிற்கு கீழ் எந்த ஒரு உணர்ச்சியுமற்று வெறும் ஆண், இல்லை மனிதனாய் வாழும் டேனியலிற்கு Nemo-வின் பாரம் தெரிய வாய்ப்பில்லை.


டேனியல் அனாதையாக பிறந்து அறிவாற்றலால் வளர்ந்து உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வந்தான். அவனுக்கேற்றார் போல் Nemo என்ற பெண்ணும் துணைக்கு வந்தாள்! Nemo ஒரு Afro-American பெண்! இவளை ஆல்ப்ஸ் மலையில் hiking சென்ற பொழுது பார்த்து பழகி காதல் கொண்டான். கல்யாணம் ஆகாமல் காதல் வளர்த்ததில் Nemo-வும் கருவுற்றாள்! அந்த சந்தோசத்தை கொண்டாட பைக்கில் வேகமாக சென்ற பொழுது குறுக்கே திக்கு தெசையற்று ஓடிவந்த ஒரு நாய் குட்டியை காப்பாற்ற பைக்கை திருப்ப, வண்டி நிலைகுலைந்து மரத்தின் மீது மோதியது! மூன்று வாரம் கழித்து கண்விழித்தவுடன் Nemo-வை பற்றி கேட்டான்! டாக்டர் தலை அசைக்கையில் Nemo இப்பூவுலகம் விட்டு சென்று விட்டாள் என்பதை உணர்ந்தான். மனமுடைந்து துக்கத்தில் இருந்தவனுக்கு இடுப்பிற்கு கீழ் உணர்ச்சி இல்லை என்பது பெரிய வலியாக தெரியவில்லை. இரண்டு வாரம் கழித்து wheel chair-ல் hospital வளாகத்தில் வலம் வந்து கொண்டிருந்த பொழுது இவன் பின்னே ஒரு நாய் குட்டி ஓடிக்கொண்டு வந்திருந்தது! நர்சிடம் விசாரித்த பொழுது அன்று நடந்த accident-ல் இந்த நாய் குட்டியும் காயம் அடைந்து வெட்னரி hospital-ல் இருப்பதாக சொன்னாள். "கெட்ட சகுனம் என்று கருதி யாரும் இந்த நாய் குட்டியை தத்தெடுக்க மறுக்கின்றனர்" என்று நுர்ஸ் சொல்ல டேனியல் அந்த நாய் குட்டியை எடுத்து மடிமீது வைத்து Nemo என்று பெயர் கூறி தான் இந்த நாய் குட்டியை தத்தெடுப்பதாக நர்சிடம் சொல்ல Nemo டேனியலை நக்குகின்றது.


வீட்டிற்கு வெளியே Nemo விடம் விளையாடிக்கொண்டிருந்த டேனியலின் மொபைலிற்கு புது ஈமெயில் நோட்டிபிகேஷன் ஒன்று வருகின்றது. மீராவிடமிருந்து வந்த பதில் ஈமெயில் என்பதால் சந்தோஷத்தில் திக்குமுக்காடுகின்றான் கூட Nemo-வும் சேர்ந்து சந்தோஷத்தில் குதிக்கின்றது.


Nemo டேனியலின் wheel chair-ன் காலடியில் கிடக்க, ஈமெயிலை Nemo-விற்கு டேனியல் படித்து காட்டுகின்றான்,


அன்புள்ள ஆனந்த் மஹேந்திரன் அவர்களுக்கு,


இதுவரை நான் யாருக்கும் தமிழில் ஈமெயில் செய்ததில்லை முதல் முறையாக உங்களுக்கு அனுப்புகின்றேன். என் குரலை பற்றி நீங்கள் கூறும் அளவிற்கு எந்த ஒரு மாயமும் அதில் இல்லை. என் குரல் உங்கள் தனிமைக்கு துணை இருப்பதாக நீங்கள் சொன்னது எனக்கு சந்தோசம் அளிக்கின்றது. ஆனால் நீங்கள் நன்றி கூறும் அளவிற்கு நான் ஒன்றும் சாதித்துவிடவில்லை, இந்த podcast-ம் என் சுயநலமே!


ஏன் இந்த ஆண்கள் பெண்ணின் வயதிற்கு பின்னால் எப்பொழுதும் இருக்கின்றீர்கள்? வயதில் என்ன இருக்கின்றது? நான் மீரா ஒரு உருவமற்ற வயதற்ற வெறும் குரல் உள்ள ஒரு பெண்! என் தனிமையை போக்க podcast செய்கிறேன்! என்னிடம் நீங்கள் போன் நம்பர்ரோ, போட்டோவோ, பர்சனல் டீடெயில்ஸோ கேட்காமல் இருந்தால் அந்த பெயரற்ற உணர்விற்கு நட்பின் அளவுகோல் இல்லாமல் ஒரு புது பெயர் வைக்கலாம். இல்லையெனில் இதோடு ஒரு முற்றுப்புள்ளியும் வைக்கலாம். அது உங்கள் விருப்பம்!


என் உணர்வுகளை உணர முடிந்தால்,

உங்கள் பதிலை எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கும்,

உருவமற்ற உணர்வுள்ள,

மீரா.


படித்து முடித்து புன்முறுவலோடு Nemo-வை பார்த்து, "பார்த்தியா Nemo மீரா எவ்வளவு கெட்டிக்காரிதானமா பதில் அனுப்பிருக்கா! அவங்க நான் ஏதோ ரோமியோன்னு நினைச்சிட்டு இருக்காங்க!! நமக்கு மட்டும் தானே தெரியும் நான் இடுப்புக்கு கீழே zero-ன்னு" என்று சொல்லி டேனியல் சிரிக்க கோபத்தில் Nemo பதில் பேசுவது போல் டேனியலை பார்த்துக்குரைக்கின்றது. "இருந்தாலும் கிறிஸ்டினாவா வாழ்ந்து சாதனை செஞ்சு! யாருக்குமே தெரியாம தன் மனசோட சந்தோஷத்துக்காக மீராவா வாழுறது எவ்வளவு கஷ்டம்ல?" Nemo முனங்குகின்றது! "எப்படி தெரியும்னு கேக்குறியா? நான் தான் ஒரு hacker-ல சும்மா இருப்பேனா!! அதான் மீரா id-ய hack பண்ணிட்டேன்!! அப்புறம் தான் தெரிஞ்சுது அது மீராவே இல்லன்னு! கிறிஸ்டினா பத்தி படிச்சப்பத்தான் அவங்களோட podcast அவங்க சொல்லாம சொன்ன வலி புரிஞ்சுது!! சரி, நான் ஒரு hacker-னு தெரிஞ்சா என் கிட்ட பேசுவாங்கனு நினைக்குறே?" Nemo சொல்ல வேண்டாம் என்பது போல் குரைகின்றது "கரெக்டா சொன்னே சொல்லவேணாம்! சரி இப்போ என்ன பதில் போடுறது?" என்று யோசிக்க Nemo தலையில் கைவைத்து சுட்டியாக தரையில் படுத்துக்கொள்கின்றது.


இதை தனது iMAC பெரிய screen-ல் கிறிஸ்டினா பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்!! தற்காப்பு கருதி கிறிஸ்டினா தனது private ethical hacking team கொண்டு ஆனந்த் மஹேந்திரனின் ஈமெயில் source-ஐ கண்டுபிடிக்க சொன்னாள். அவர்கள் டேனியலின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அதிலுள்ள CC Camera-வையும் hack செய்து கிறிஸ்டினாவிடம் கொடுத்துவிடுகின்றனர். Ethical hacking team head-யிடம் "இது பற்றி வெளியே மூச்சு விடக்கூடாது" என்று சொல்ல அவரும் சிரித்துக்கொண்டே "மேடம் நீங்க எத பத்தி சொல்லறீங்கன்னே எனக்கு தெரியலியே? அப்புறம் நான் எப்படி மூச்சு விடுறது" என்று கூறி சிரித்து வெளியேறுகின்றார்.


கிறிஸ்டினா அவரை சிரித்து வழியனுப்பிய பின் டேனியலுக்கு ஒரு ஈமெயில் type செய்கின்றார் "என்னை புரிந்த அன்பு Nemo-விற்கு எனது அன்பு முத்தங்கள்!!"


உடனே ஒரு புது ஈமெயில் நோட்டிபிகேஷன் வர டேனியல் யாரென்ற தோரணையில் மொபைலை எடுத்து பார்க்க மீரா என்று காண்பிக்கின்றது "அதுக்குள்ள ஒரு புது மெயிலா!" என்று திறந்து பார்க்க! டேனியல் முகத்தில் அதிர்ச்சி! சுற்றும் முற்றும் பார்த்து பொறுமையாக தான் கிறிஸ்டினாவால் hack செய்யப்பட்டோம் என்று சுதாரித்துக் கொண்டு CC camera-வை திரும்பிப் பார்த்து சிரித்து கை அசைகின்றான். Nemo-வும் எழுந்து நின்று வாலாட்டுகின்றது.


கிறிஸ்டினா iMAC-ல் அவர்களை பார்த்து கையசைத்து சிரிக்கின்றாள்...எல்லாம் புரிந்த டேனியல் தனது bluetooth speaker-ல் ஒரு பாட்டு போடுகின்றான்,


உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே...



இங்கே நான் மேலே கூறியுள்ள கிறிஸ்டினாவும் டேனியலும் என்னை போல் பொய்யானவர்கள்,

அன்பு பொய்களோட பொய்யாக,

சிவராஜ் பரமேஸ்வரன்


2 comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
Convidado:
17 de jul. de 2023
Avaliado com 5 de 5 estrelas.

Nalla karpanai valam. Kadhaium nalla irrukku.

Curtir
Sivaraj Parameswaran
17 de jul. de 2023
Respondendo a

மிக்க நன்றி! மிக்க நன்றி!! நண்பர்களிடத்திலும் பகிரவும்!! உங்கள் ஆதரவே என் உத்வேகம்!!

Curtir
bottom of page