வெண்ணிலாவின் தேரில் ஏறி
- Sivaraj Parameswaran
- May 25, 2024
- 3 min read
Updated: Feb 25

"வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானம் உள்ள ஊமைப்போல
தானம் கேட்க கூசி நின்றேனே
நிறங்கண்டு முகம் கண்டா
நான் நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டே
நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே…."
தனனம் தான்னா நம்...என்று பாட்டு பூம் பாக்ஸில் ஒலித்துக்கொண்டிருக்க ராவணனும் நானும் மண்டோதரியும் புஷ்பக விமானத்தில் மேகங்களை கிழித்துக்கொண்டு அழகிய சொர்கமான லங்கா பூரியை சுற்றி வந்து கொண்டிருந்தோம்! அப்பொழுது பாட்டை கேட்டு தாளம் தட்டிக்கொண்டே ராவணன் என்னை பார்த்து,
“சிவா நீ ஏன் எங்களுடன் இங்கே நிரந்தரமாக இருந்து விட கூடாது?
என்று கேட்க நான் ஒரு கணம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்தேன்..
“சிவா நான் சொல்வதை கேள் பேசாமல் மண்டோதரியை விவாகம் செய்துக்கொண்டு இங்கேயே இருந்து விடு! நான் உனக்கென்று ஒரு புது ராஜியம் நிர்ணயம் செய்து உன்னை அதற்கு அரசனாக்கி விடுகின்றேன் என்ன சொல்கிறாய்?”
இதை கேட்டு நான் திக்கு முக்காடி நிற்க மண்டோதரி என்னை பார்த்து வெட்க பட்டு சிரித்துக்கொண்டிருந்தாள். அந்த அழகிய சிரிப்பு என்னை வெட்கப்பட வைத்தது… அந்த கணம் என்னை நான் யாரென்று மறந்தேன்... ஸ்ருதியை மறந்தேன்... யாமினியை மறந்தேன்... நீரோவை மறந்தேன்... ஆனந்தியை மறந்தேன்... அகிலை மறந்தேன்... அபியை மறந்தேன்... தேவியை மறந்தேன்... டையானாவை மறந்தேன்… கிறிஸ்டினாவை மறந்தேன்... எல்லோரையும் மறந்தேன்...
மண்டோதரி என் அருகில் வந்து “நான் உங்களை ஒன்று கேக்கலாமா?”
“சொல்லுங்கள் தேவி” என்று நான் பணிந்து சொல்ல
மண்டோதரி ஒரு வித பதட்டத்துடன் “நீங்கள் அந்த சூரியகுலத்தோர் போல் அல்லவே?” என்று கேட்க,
நான் குழம்பி போய் “சூர்யகுலமா? அது என்ன குலம்?”
ராவணன் கர்ஜித்துக்கொண்டு “அது ஒரு கேடுகெட்ட ராஜ குலம்! பெண்ணை மதிக்க தெரியாத குலம்! பொய் பிரட்டுக்கு பெயர் போன குலம்!”
“ஐயனே கொஞ்சம் புரியும் படி எடுத்துரைக்க நான் வேண்டி கேட்டுக்கொள்கின்றேன்”
ராவணன் சற்றே சோகமாகி “சிவா சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் மண்டோதரி காட்டில் வழக்கம் போல தன் தோழிகளுடன் வேட்டைக்கு சென்றாள். வேட்டைக்கு சென்ற இடத்தில் ஒருவன் சிங்கத்திடம் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான்! இதைக்கண்டு பதட்டமடைந்த மண்டோதரி உடனே ஓடி சென்று அவனை சிங்கத்திடமிருந்து காப்பாற்றினாள்! அவன் ஒரு ராஜா குடும்பத்தை சேர்ந்தவன்! மண்டோதரியை கண்ட மாத்திரமே அவன் அவள் மீது காதலுற்றான்! மண்டோதரியும் பெண் அல்லவே அவளும் காதலுற்றாள். காதல் கனிந்து மலர்ந்து பூத்த பின் மோகம் மறைந்தது. அவன் அவனது ராஜா புத்தியை காட்ட துடங்கினான்! வேறொரு பெண்ணை மணமுடித்தான். இதை பற்றி கேட்க சென்ற மண்டோதரியை அடித்து துன்புறுத்தினான். பெண்ணை அடிக்கும் வழக்கம் நம் வம்சத்தில் இல்லை! சிங்கத்திடம் தோற்ற துரப்பன் மண்டோதரியிடம் அவனது வீரத்தை காட்டினான்... மண்டோதரி அவன் மீது காதல் கொண்டதால் அவள் அவன் மீது அவளது வீரத்தை காட்டவில்லை!! இதை அறிந்த நான் ஒரு அண்ணனாக கலங்கினேன்!! கோபத்தில் அவர்கள் மீது படை எடுக்க சென்றேன்! சென்ற இடத்தில் அவனது தமையனை கண்டேன் கூட அவனது மனைவியான என் மகளை கண்டேன்! என்ன செய்வது என்று அறியாமல் நிற்கையில் போர் தொடுக்க முடிவெடுத்தேன்!! மொத்த சாம்ராஜ்யத்தையும் கூண்டோடு அழித்தேன்!! மகளையும் மருமகனையும் கொல்லாமல் மேற்கே உள்ள ஒரு சிறு பகுதியை கொடுத்து ஆளுமாறு கொடுத்து விட்டு வந்துவிட்டேன்!! அன்று முதல் இன்று வரை மண்டோதரிக்கு அந்த குலத்தின் மீது ஒரு பயம் உள்ளது”
நான் இகதையை கேட்டு விட்டு குழம்பி போய் நின்றேன் “ஐயனே உங்கள் மகள் பெயர் வைதேகியோ (சீதா) என்று கேட்டேன்”
“ஆமாம் சிவா உனக்கெப்படி தெரியும்?”
“ஐயனே எங்கள் ஊரில் இக்கதை வேறு மாதிரி அல்லவா சொல்லப்படுகின்றது”
எப்படி என்று இருவரும் கேட்க நான் இருவருக்கும் எடுத்துரைத்தேன். கதை கேட்டு முடித்த பின் ராவணன் கர்ஜித்து சிரித்த படி “பேடி பயல்கள் இன்னும் சரித்திரத்தை மாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள்! இவர்கள் திருந்தவே மாட்டர்கள் சிவா!! சரி நீ என்ன சொல்கின்றாய்? இங்கேயே இருந்து விடுகிறாயா எப்படி?”
“இல்லை ஐயனே எனக்காக என் மீனு அங்கே காத்துக்கொண்டிருப்பாள்! அவளை விட்டு வருவது எப்படி ஐயனே?”
ராவணன் மீண்டும் சிரித்துகொண்டே “நீ இதைத்தான் சொல்வாய் என்று நான் மண்டோதரியிடம் பந்தயம் வைத்திருந்தேன்!”
“அண்ணா விடுங்கள் அவர் கொடுத்து வைத்தது அவ்வளவே! வழியே வந்த அமரத்துவத்தை வேண்டாம் என்று சொன்னால் நாம் என்ன செய்வது”
நான் சிரித்துகொண்டே “தேவி என்னை இந்த ஜன்மம் மன்னித்து விடுங்கள் அடுத்து ஜெனனம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் நான் உங்களை தேடி வருவேன் தேவி!”
ராவணன் மண்டோதரியை பார்த்து “சரி நேரம் ஆகிவிட்டது அவனை பெர்முடா முக்கோணத்தில் விட்டு விட்டு வந்து விடு! வரும் பொழுது இவனது நினைவுகளை மறக்காமல் அழித்துவிடு”
மண்டோதரி ராவணன் சொன்னது போல என்னை ஒரு கண்ணாடி கடலில் இறக்கினாள். நான் இறங்கி நின்ற பின் ஒரு சிகப்பு வெளிச்சம் மின்னத்துடங்கியது. “ஐயோ இயந்திரத்தில் ஏதோ கோளாறு” என்று மண்டோதரி சொல்லி முடிப்பதற்குள் நான் ஒரு குழிக்குள் ஈர்க்கப்பட்டேன்... கண் விழித்து பார்த்தபோது நான் மெரீனா கடற்கரையில் கரையோரமாக படுத்து கொண்டிருக்கின்றேன் டாக்டர்...
என்று நான் டாக்டரை பர்த்துக் கூற, டாக்டர் என் அப்பா அம்மாவை பார்த்து “Nothing to worry! Classic case of Hallucination! எங்க கிட்ட விடுங்கோ நாங்க பார்த்துக்குறோம்”
டாக்டர் ராவணனும் மண்டோதரியும் திரும்ப வந்தால் என்ன செய்வது என்று சொல்லி என்னை ரவணனிடமிருந்தும் மண்டோதரியிடமிருந்தும் பாதுகாப்பாக வைக்க, என்னை தனியாக ஒரு வெள்ளை அறையில் காலில் சங்கிலியுடன் பத்திரமாக வைத்திருக்கின்றனர்.
இருந்தும் என் பழாய் போன மனசு கேட்க வில்லை நான் பத்திரமாக ஊர் வந்து சேர்ந்தேன் என்று மண்டோதரிக்கு சொல்ல வேண்டும்...
இக்கடிதத்தை படிப்பவர்கள் இகடிதத்தை ஒரு பாட்டிலில் இட்டு இதை பெர்முடா முக்கோணத்தில் போட்டுவிடுமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்... நன்றிகள்...
எழுதியது,
சிவா (எ) சிவராஜ் பரமேஸ்வரன்
Awesome imagiation... Really. interesting story and brillianat writing.... Naveena Kadhaal Ramayanam...Else Naveena Sivamandothari Kaviyam...